அரசியல்

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: மக்களை திட்டமிட்டு குழப்புகிறது திமுக- இபிஎஸ் குற்றச்சாட்டு!

எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக மக்களை திட்டமிட்டு குழப்புவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: மக்களை திட்டமிட்டு குழப்புகிறது திமுக- இபிஎஸ் குற்றச்சாட்டு!
Edappadi Palaniswami
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக மக்களை திட்டமிட்டு குழப்புவதாகவும் குற்றம்சாட்டினார்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மகளிர் பாதுகாப்பு

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "இது கொடுமையான செயல். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை," என்று குற்றம் சாட்டினார். மேலும், "காவல் துறையினரைக் கண்டு அஞ்சாமல் குற்றம் புரிபவர்கள் நடந்து கொள்கின்றனர். காவல் துறை ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா, பாதுகாப்பு அளிக்கிறதா என்ற நிலைதான் இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு இல்லாத நிலை இருக்கிறது. போதைப்பொருள் அதிகரித்துள்ளது. போதை ஆசாமிகளால் இந்தச் சம்பவங்கள் நடக்கின்றன," என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

நிரந்தர டி.ஜி.பி. நியமனத்தில் பாரபட்சம்

தொடர்ந்து பேசிய அவர், "நிரந்தர டி.ஜி.பி. இன்னும் நியமிக்கப்படவில்லை. வேண்டப்பட்டவர் வர வேண்டும் என்பதற்காக நிரந்தர டி.ஜி.பி. நியமிக்கப்படவில்லை. டி.ஜி.பி. நியமனத்தில் இந்த அரசு முறையாக விதிகளைப் பின்பற்றவில்லை. யு.பி.எஸ்.சி. (UPSC) மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்பியும் டி.ஜி.பி. நியமனம் செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தனிநபர் வழக்குத் தொடரப்பட்டு மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏன் இந்த பாரபட்சம் பார்க்கின்றனர்?" என்று அவர் வினவினார்.

அ.தி.மு.க. கூட்டணி

மேலும் அவர், வரும் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும், அ.தி.மு.க. தான் ஆட்சியமைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார். "கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ். தான் என அமித் ஷா ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துவிட்டார். அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க.வால் குறை சொல்ல முடியாததால் பா.ஜ.க.வுடனான கூட்டணியை விமர்சிக்கின்றனர்," என்று அவர் கூறினார்.

'எஸ்.ஐ.ஆர்.' (SIR) விவகாரம்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் திட்டம் (எஸ்.ஐ.ஆர்.) குறித்து பேசிய அவர், "வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் திட்டம் கொண்டுவரப்பட்டுச் சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்கள், இடமாற்றம் ஆனவர்கள் பெயர்கள் தொடர்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

"எஸ்.ஐ.ஆர். என்றாலே பதறுகிறார்கள்; ஏன் பதறுகிறார்கள்? இதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு மாதம் என்பது போதுமான காலம். இறந்தவர்கள் நீக்கப்படக் கூடாது என்பது தி.மு.க.வின் நோக்கம். தேர்தலின்போது திருட்டு ஓட்டுப் போட வசதியாக இருக்கிறது. அது தடுக்கப்படும் என்பதால் அதுதான் இவர்களுக்குப் பயம். வாக்குகள் பறிபோகும் என அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயல்கின்றனர். திட்டமிட்டே மக்களைக் குழப்புகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது," என தெரிவித்தார்.

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் அ.தி.மு.க. உச்ச நீதிமன்ற வழக்கில் இணைந்தது குறித்துப் பேசிய அவர், "எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. தவறான தகவலைப் பதியவைத்தால் சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அ.தி.மு.க. வழக்கில் இணைந்துள்ளது. எஸ்.ஐ.ஆர். இதற்கு முன்பு 8 முறை நடந்துள்ளது," என்று அவர் விளக்கம் அளித்தார்.