புதுச்சேரி சட்டப் பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (மார்ச் 10) தொடங்கியது. நேற்று (மார்ச் 11) நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 12) புதுச்சேரி அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை சட்டப் பேரவையில் முதலமைச்சர் என்.ரங்கசாமி தாக்கல் செய்தார்.
13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் 2025-26-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி உரையாற்றினார். அதில், புதுச்சேரி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பட்ஜெட் சிறப்பம்சங்கள்:
- விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 2000 ரூபாய் வழங்கப்படும்.
- 21 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இனி 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகள் உதவித்தொகைகள் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
- ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்.
- அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
- பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை, இனி வாரத்தில் அனைத்து நாட்களும் வழங்கப்படும்.
- 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று இளநிலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
- மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும். மீனவ சமுதாய ஈமச்சடங்கு தொகை 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்வு.
- புதுச்சேரி ஈசிஆர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும்.
- புதுச்சேரி மத்திய சிறைச்சாலை முழுமையாக கணினி மயமாக்கப்படும்.
- எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் இருந்து 3 கோடி ரூபாயாக உயத்தப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
சுமார் 1 மணி நேரம் 10 நிமிடம் பட்ஜெட்டை முதலமைச்சர் தாக்கல் செய்து முடித்த நிலையில் சபையை நாளை காலை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்து ஒத்திவைத்தார்.