அரசியல்

234 தொகுதியிலும் மினி ஸ்டேடியம்? உதயநிதிக்கு ஆர்.பி.உதயக்குமார் கேள்வி

சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால், அறிவிப்பு காகித்ததில் தான் இருக்கிறது, களத்தில் ஒரு மினி ஸ்டேடியத்தையும் காணவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

234 தொகுதியிலும் மினி ஸ்டேடியம்? உதயநிதிக்கு ஆர்.பி.உதயக்குமார் கேள்வி
RB Udhayakumar questions to Udhayanidhi about his promises
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நிறைவில் வெற்றி பெற்ற மதுரை டி.எஸ்.கே.பி.என் அணிக்கு முதல் பரிசையும், மெய்யணம்பட்டி கேம்பிரிஜ் அணிக்கு இரண்டாம் பரிசையும், உசிலம்பட்டி எஸ்.பி.எல் அணிக்கு மூன்றாம் பரிசையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மேலூர் MLA பெரியபுள்ளான் என்ற செல்வம், உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ நீதிபதி உள்ளிட்டோர் இணைந்து வழங்கினர்.

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக:

இதுத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “உலக வல்லரசு நாடுகளிலேயே இந்தியா இன்று பலத்துடன் உள்ளது என்பதை நிரூபித்து காட்டியுள்ள இராணுவ வீரர்களுக்கும், பாரத பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் முதன் முதலாக வாழ்த்து சொன்னது எடப்பாடி பழனிச்சாமி தான்.

விளையாட்டுத்துறை பொற்காலம் இப்போது. விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு கொடுத்தது தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று திமுக சொந்தம் கொண்டாடுகிறார்கள். இன்று அதிமுக செய்த திட்டங்களுக்கெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள், சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தில், விளையாட்டுத்துறையில் இருப்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என 10% இட ஒதுக்கீடு கொடுத்தவர் அம்மா அவர்கள். கிராம விளையாட்டிலிருந்து பன்னாட்டு விளையாட்டு வரை உயர்த்துவதற்காக செய்தார்.

இன்று விளம்பரப்படுத்துகிறார்கள், சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அறிவிப்பு காகித்ததில் தான் இருக்கிறது. களத்தில் ஒரு மினி ஸ்டேடியத்தையும் காணவில்லை, இது தான் திமுக அரசு” என பேசினார்.