அரசியல்

திமுக கூட்டணியில் பாமக? அரசியலில் எதுவும் நடக்கலாம்- ராமதாஸ் சூசகம்!

திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் பா.ம.க. இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்

திமுக கூட்டணியில் பாமக? அரசியலில் எதுவும் நடக்கலாம்- ராமதாஸ் சூசகம்!
Ramadoss
பா.ம.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விருப்ப மனுக்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி குறித்துப் பாராட்டியதுடன், கூட்டணியில் சேர்வது குறித்துக் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தி.மு.க. அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு ஆதரவளித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட டாக்டர் ராமதாஸ், "ஆட்சியில் பங்கு வேண்டாம் என நிபந்தனை அற்ற ஆதரவை கருணாநிதிக்குக் கொடுத்தோம். காங்கிரஸ்காரர்கள் ஆட்சியில் பங்கு கேட்டனர். ஆனால், ஆட்சியில் பங்கு இல்லாமல் 5 ஆண்டுகள் முழுமையாகக் கருணாநிதி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தோம்" என்று தெரிவித்தார்.

தற்போதைய தி.மு.க. ஆட்சி குறித்துக் கேட்கப்பட்டபோது, "முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது" என்று அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

அன்புமணி விவகாரமும் கட்சியின் நிலைப்பாடும்

பா.ம.க. என்பது தனது தலைமையிலான ஒரே அணிதான் என்று குறிப்பிட்ட ராமதாஸ், "நான் சொன்னால் ஏன், எதற்கு என்று தட்டாமல் இருக்கும் தலைவரை நான் உடன் வைத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார். மேலும், கட்சியைப் கைப்பற்றுவது தொடர்பாகச் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து வெற்றியும் பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

'நீங்கள் தான் பா.ம.க.வின் முகம் என்கிறீர்கள்; ஆனால் உங்களை மீறி எடப்பாடி பழனிசாமி அன்புமணியை ஆதரித்தது ஏன்?' என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இரண்டில் ஒன்றை தொடுங்கள். நான் சொல்கிறேன்," என்று பதிலளித்துச் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

திருமாவளவன் கூட்டணியில் இணைவீர்களா?

திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் பா.ம.க. இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த டாக்டர் ராமதாஸ், "அரசியலில் எதுவும், எப்போதும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதுவும் எப்போதும் நடக்காது என கூற முடியாது," என்று பதில் அளித்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விருப்ப மனுக்கள் தாக்கல்

நிகழ்ச்சியின் முடிவில், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 27 பேர் விருப்ப மனு தாக்கல் அளித்துள்ளதாகவும், டாக்டர் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்திமதி போட்டியிட 100-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருப்பதாகவும் பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.