அரசியல்

’திமுகவை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் ரெடி’..அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு!

''மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் கூறியபோது கூட்டணிக் கட்சியினரே சந்தேகப்பட்டனர். ஆனால் வெற்றி பெற்றோம். தற்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார்'' என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

’திமுகவை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் ரெடி’..அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு!
Kkssr Ramachandran And Udayanidhi Stalin

விருதுநகர்: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தகவல்கள் பரவின. அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் எனவும் 3 சீனியர் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு  3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வேகமாக பரவின. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாற்றம் நிகழவில்லை. முதல்வரும் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பி விட்டார். 

இதனால் விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் எனவும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல்கள் உலவி வருகின்றன. திம்முகவின் பல்வேறு அமைச்சர்களும் உதயநிதி துணை முதல்வராவதை வரவேற்றுள்ளனர். இந்நிலையில், திமுகவை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ‘’திமுகவில் இருந்து எம்ஜிஆர், வைகோ வெளியே சென்றாலும் சேதாரம் இல்லாமல் 75 ஆண்டு காலமாக கட்சி கட்டமைப்புடன் உள்ளது. என்னுடைய அப்பாவின் கட்சி திமுக; என்னுடைய கட்சி திமுக; எனது மகனின் கட்சி திமுக; எங்கள் குடும்பத்தில் அனைவருமே திமுக தான். அதனால் இது குடும்ப கட்சி தான். திமுகவை குடும்பக் கட்சி என்று சொல்வதில் எனக்கு பெருமை தான். 

மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் கூறியபோது கூட்டணிக் கட்சியினரே சந்தேகப்பட்டனர். ஆனால் வெற்றி பெற்றோம். தற்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார். விடுபட்ட அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுத்துவிட்டு தான், சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓட்டு கேட்க வருவோம். 

அண்ணாவிற்கு பிறகு, கலைஞரும், அவருக்குப் பிறகு ஸ்டாலினும் திமுகவை வழி நடத்துகின்றனர். கலைஞரை விட கூடுதலான வெற்றியை ஸ்டாலின் பெற்று தந்துள்ளார். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக உதயநிதி இருக்கிறார். ஸ்டாலினை விட அதிகமாக அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். திமுகவை வழிநடத்த அடுத்த தலைவராக உதயநிதி தயாராக இருக்கிறார்’’ என்று கூறியுள்ளார்.