அரசியல்

திமுக ஆட்சி பிற மாநிலங்களை எல்லாம் கவர்ந்து இழுக்கிறது –தென்காசியில் வைகோ பேச்சு

இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என நினைக்கிற அரசு தமிழ்நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு

திமுக ஆட்சி பிற மாநிலங்களை எல்லாம் கவர்ந்து இழுக்கிறது –தென்காசியில் வைகோ பேச்சு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மதிமுக சார்பாக மதசார்பின்மையும், கூட்டாட்சியும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மதிமுக சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்.

திமுக மதசார்பற்ற அரசு

இந்த கூட்டத்தின்போது அவருக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, “உங்கள் கோவில்களில் நன்றாக வழிபடுங்கள்.இந்த அரசு அனைத்து ஆலயங்களையும் புனரமைப்பு செய்யும் நிதியை ஒதுக்கி தந்துள்ளது.

திமுக அரசும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து சமய கோவில்களுக்கு செய்ய வேண்டியதை செய்கிறார்கள். ஆகவே இது மதசார்பற்ற அரசு. இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என நினைக்கிற அரசு.

பிற மாநிலங்களை கவர்ந்து இழுக்கிறது


தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திராவிட மாடல் ஆட்சி இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களையெல்லாம் கவர்ந்து இழுக்கிறது.

அந்த மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டு அரசை போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்தியை எதிர்த்து ரத்தம் சிந்தினோம். 1965இல் துப்பாக்கி முனைகளுக்கு முன்னே நின்றோம்.இன்றைக்கு இந்தியை கேரளம் எதிர்க்கிறது. இந்தியை கர்நாடகம் எதிர்க்கிறது. இந்தியை மராட்டியம் எதிர்க்கிறது. இந்தியை மேற்கு வங்கம் எதிர்க்கிறது.

கொள்கைகளை பாதுகாக்க போராடும்

எங்கள் கொள்கைகள் ஜீவிதமான கொள்கைகள். காலாகாலத்திற்கும் இருக்கும் கொள்கைகளை தான் எங்கள் ஆசான்கள், எங்கள் தலைவர்கள், பேரறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் சொல்லித்தந்து விட்டு சென்றுள்ளார்கள்.

அந்த கொள்கைகளை பாதுகாக்க போராடும் இயக்கமாக மதிமுக இயங்கும். திமுக கூட்டணியில் தான் இயங்கும்” என்று பேசினார்.