அரசியல்

கடலூர் ரயில் விபத்து: மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்

“கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் ரயில் விபத்து: மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்
Mutharsan CPI
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 9-வது மாவட்ட மாநாடு பெரம்பலூர் 4 ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் பங்கேற்றார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முத்தரசன், “பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்ற ரீதியில் பல்வேறு நிபந்தனைகளின்கீழ் பாஜகவுக்கு எதிரான வாக்களர்கள் நீக்கப்பட்டு வருவது மத்திய தேர்தல் ஆணையம் நடுநிலையற்று செயல்படுவதையே காட்டுகிறது.

இன்று பீகாரில் நடைபெறும் இதேநிலை நாளை தமிழ்நாட்டிலும் கண்டிப்பாக நடைபெறலாம். மத்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சுதந்திரமற்றதாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்ததகையை நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த தொகுதியான ஸ்ரீ பெரும்புத்தூரில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவின் போது இந்து அறநிலைய துறை அதிகாரிகள் அவரை அவமரியாதை செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரம் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்

கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது குறித்து பேசிய அவர், “கடலூர் மாவட்டத்தில் ரயில்வே கேட் முறையாக மூடப்படாததால் இன்று பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.