அரசியல்

பாஜகவின் 'சி' டீம் விஜய்... அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்!

திமுகவுக்கு விஜய் போட்டியே இல்லை இன்றும் பாஜகவின் 'சி' டீம் தான் தவெக என்றும் அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

பாஜகவின் 'சி' டீம் விஜய்... அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்!
Minister Regupathy and Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசியதற்குப் பதிலளிக்கும் வகையில், இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, விஜய் மற்றும் அவரது கட்சியைப் பற்றிக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய்யின் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதியின் பதில்

நேற்று காஞ்சிபுரம் கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், "யாரைப் பார்த்துத் தற்குறி என்கிறீர்கள்? அவர்கள் தற்குறி அல்ல, ஆச்சர்யக்குறிகள்; மாற்றத்துக்கான அறிகுறி" எனப் பேசியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரகுபதி, "த.வெ.க. தலைவர் விஜய் தரக்குறைவாக விமர்சித்து தரம் தாழ்த்திக்கொள்கிறார். மக்கள் மத்தியில் தனது தரத்தை விஜய்யே தாழ்த்திக் கொள்ளும் நிலையில் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை. விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எங்களுக்குத் தெரியாது. திமுகவுக்குத் தேர்தல் தான் குறி" என்று கூறினார்.

திமுகவுக்குப் போட்டியே இல்லை

மேலும், "திமுகவுக்கு விஜய் போட்டியே இல்லை. விஜய் உள்ளிட்ட யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. பா.ஜ.க.வின் 'C' டீம்தான் விஜய். முன்பு ஸ்லீப்பர்செல்களாக இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ளனர். களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம்" என்றார்.

அறிவுத் திருவிழா குறித்து பேச்சு

தற்போதுள்ள இளைய தலைமுறை தமிழர்களின் வரலாற்றையும், திராவிடத்தின் வரலாற்றையும் அறிந்து கொள்வதற்காகவே திமுக அறிவுத் திருவிழாவை நடத்தியதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

"இதுபற்றி எல்லாம் சிலருக்குப் புரிதல் கிடையாது. அவர்களது ஒரே எண்ணம் ஆட்சியை கைப்பற்றுவது. ஆட்சிக்கு வந்து உட்கார வேண்டும் என்பதுதான்.

அதைத் தவிர தமிழர்களைப் பற்றியோ தமிழர்களின் கொள்கையைப் பற்றியோ பண்பாட்டைப் பற்றியோ கலாச்சாரத்தைப் பற்றியோ அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது" என்றும் விஜய் மற்றும் த.வெ.க.வினரைக் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சித்தார்.