BJP Leader Tamilisai Soundararajan About DMK : கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள, வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் துணைநிலை ஆளுநரும், பாஜக மூத்த தலைவர்களுல் ஒருவருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை முதலமைச்சரிடம் எதிர்பார்த்தோம். முருகன் மாநாட்டை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நேரில் போகவில்லை முருகன் என்றால் நேரில் சொல்ல மாட்டார்போல.. ஜாதி, மத, இன வேற்றுமை பார்ப்பதில்லை என்கின்றனர். அதேபோல ஹிந்து மதத்தை வேற்றுமையாக பார்க்கவில்லை என்றால் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்க வேண்டும்.
சகோதரி விஜயதரணி ஒரு கட்சியில் இருந்து விலகி வேரு கட்சியில் இணைந்தவுடன் பதவி கிடைக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது இயல்புதான். பாஜகவில் இணைந்த அனைவருக்கும் பதவி கிடைக்கும். சிறிது காலம் ஆகலாமே தவிர காலம் கடக்காது. விஜயதாரணி நம்பிக்கையோடு இருக்க வேண்டும். எல்லாருக்கும் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். அதிலும் பெண்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.
தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதனை கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அண்ணாமலை சொல்லி இருக்கிறார். கூட்டணி குறித்து மாநில தலைவர் கூறியிருப்பது அவரது உரிமை. ஆனால் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதை வைத்து, அதனை முடிவு செய்துவிட முடியாது. கட்சியில் உள்ள மற்ற தலைவர்களின் கருத்து நிர்வாகத்தின் கருத்து கேட்கப்பட்டு அதிலிருந்து ஒரு முடிவு எடுக்கப்படும். மாநிலத் தலைவர் சொல்லி இருக்கும் கருத்துக்கு உட்படுவது ஒரு காரியகர்த்தாவின் செயல்.
நடிகர் ரஜினிகாந்த் திமுக ஆலமரம் போன்றது எனக் கூறியிருந்தார். அப்படி தான் தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் ஆலமரம் என்றார்கள். அங்கு ஆட்சி மாறி இருக்கிறது. ரஜினிகாந்த் திமுகவில் புயலையும், சுனாமியையும் உருவாக்கி இருக்கிறார். கட்சிக்கு கடுமையாக உழைத்த துரைமுருகன் இன்றும் ஸ்டாலின் அவர்களுக்கு கீழ் இருக்கிறார்.
அடுத்ததாக உதயநிதிக்கு கீழும் இருக்க வேண்டியுள்ளது. இதனால்தான் வாரிசு அரசியலை நாங்கள் வேண்டாம் என்கிறோம்.. உதயநிதி ஸ்டாலின் துரைமுருகனின் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சொல்லி இருக்கிறார். அப்போ ரஜினிகாந்தின் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளலாமா?” என்று தெரிவித்தார்.