அரசியல்

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
CM Stalin
திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வின் இளைய மகன் திருமண விழா சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்துப் பேசினார். தனது உரையில், தி.மு.க.வை யாராலும் ஒரு பொழுதும் அழுக்கமுடியாது என்று உறுதிபட தெரிவித்தார்.

தி.மு.க. என்பது இயக்கம்; ஓய்வே கிடையாது

முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "தி.மு.க.வைக் கழகம் என்று மட்டுமல்ல, இயக்கம் என்றும் கூறுவார்கள். இயக்கம் என்பதால் நமக்கு ஓய்வே கிடையாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்பதுதான் இயக்கம். சின்ன தடைகளைப் பார்த்துத் தேங்கினால் தேக்கம் ஆகிவிடும். தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான்," என்றார்.

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி

தொடர்ந்து, தி.மு.க.வை அழிக்க எதிரிகள் புதிய உத்திகளைப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். "நம்மை அழிக்க எதிரிகள் புதுப்புது உத்திகளையும், முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். வருமான வரித் துறை, சி.பி.ஐ. என ஏவினார்கள். தற்போது எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) என்கிற ஆயுதத்தை எடுத்து தி.மு.க.வை அழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஒரு போதும் தி.மு.க.வை அவர்களால் அழிக்க முடியாது," என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம்

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், "டெல்லியில் இருக்கும் பிக்பாஸூக்கு பழனிசாமி ஆமாம் சாமி போட்டுதான் ஆக வேண்டும்," என்று கூறினார்.

எஸ்.ஐ.ஆர். விவகாரம் குறித்துப் பேசிய அவர், "எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அ.தி.மு.க.வும் மனு தாக்கல் செய்துள்ளார்கள். இது கபட நாடகத்தை நடத்த அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பா.ஜ.க. என்ன கூறினாலும் அதை அ.தி.மு.க.வினர் ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க.வின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது," என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.