கடந்த 1529-ஆம் ஆண்டு முகலாயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருந்த பாபர் பசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மிகப் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது.
இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஆண்டு ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது முதல் அங்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலை பயங்கரவாத கும்பல் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைப்புகளுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்ததாகவும், ராமர் கோயிலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கைது நடவடிக்கையின் போது, அந்த நபரிடம் இருந்து இரண்டு வெடிக்குண்டுகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அப்துல் ரஹ்மான் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் அறிவுறுத்தல்களின்படி, இந்த சதித் திட்டத்தில் தீவரமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ராமர் கோயில் மற்றும் அரசு அலுவலகங்களை பலமுறை பார்வையிட்டு ஐஎஸ்ஐ அமைப்பினரிடம் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.
உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத்தில் இருந்து ஃபரிதாபாத்திற்கு ரயிலில் வந்த அப்துல் ரஹ்மான், அங்கு ஒரு நபரிடம் இருந்து வெடி குண்டுகளை வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிறப்பு போலீஸார் அப்துல் ரகுமானுக்கு உள்ளூரில் உள்ள தொடர்புகள் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த சதியில் யாரெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.