இந்தியா

திருப்பரங்குன்றம் விவகாரம்: வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்: வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!
L Murugan
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் இன்று (டிசம்பர் 5) நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மக்களவையில் திமுக மற்றும் பாஜக எம்.பி.க்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

ஒத்திவைப்பு தீர்மானமும் அவையில் நடந்த அமளியும்

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி இருந்தனர். இன்று அவை தொடங்கிய நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்த நிலையில், சபாநாயகர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து கடும் அமளி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒத்திவைப்பு நோட்டீஸை ஏற்க மறுத்ததால், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

டி.ஆர். பாலுவின் குற்றச்சாட்டு

மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, நூறாண்டுகளுக்கு மேலாக தீபம் ஏற்றும் இடத்தில் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டதாகத் தெரிவித்தார். 1996 மற்றும் 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, பாரம்பரிய இடைத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் அமைதியை குலைக்க மதவாத சக்திகள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய டி.ஆர்.பாலு, ஒரு 'ஆர்.எஸ்.எஸ். நீதிபதி' அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இணை அமைச்சர் எல்.முருகன் பதில்

இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் தமிழ்நாடு அரசு அராஜகப் போக்கில் ஈடுபட்டுள்ளது என்று பதிலளித்தார். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மதிக்கவில்லை என்றும் அவர் சாடினார். மேலும், மக்களின் வழிபாட்டு உரிமையை தமிழ்நாடு அரசு தடுப்பதாகவும், 'ஓட்டு வங்கி' அரசியலுக்காகக் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைத் தாஜா செய்ய இவ்வாறு செய்கிறார்கள் என்றும் எல். முருகன் குற்றம் சாட்டினார். எல். முருகனின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் அவரது இருக்கைக்கு எதிரே சென்று முழக்கமிட்டதால் மக்களவையில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முன்னதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், இரண்டாவது நாளாக நேற்றும் தீபம் ஏற்றத் தடை விதிக்கப்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.