இந்தியா

வீர மரணம் அடைந்த கர்னல் மன்பிரீத் சிங்குக்கு 'கீர்த்தி சக்ரா' விருது.. மத்திய அரசு அறிவிப்பு!

கர்னல் மன்பிரீத் சிங் ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் லார்கிபோரா, சல்தூரா மற்றும் கோகர்நாக் ஆகிய இடங்களில் மிகவும் துணிச்சலுடன் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததால் அப்பகுதி மக்களால் ஹீரோ என அழைக்கப்பட்டு வந்தார்.

வீர மரணம் அடைந்த கர்னல் மன்பிரீத் சிங்குக்கு 'கீர்த்தி சக்ரா' விருது.. மத்திய அரசு அறிவிப்பு!
Colonel Manpreet Singh

ஜம்மு: இந்தியாவில் சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது. 

இதில் ராணுவ வீரர்களின் வீர, தீர செயல்களுக்காக 'கீர்த்தி சக்ரா' விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்   பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவத்தின் கர்னல் மன்பிரீத் சிங்குக்கு 'கீர்த்தி சக்ரா' அறிவிக்கப்பட்டுள்ளது.

19 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் கட்டளை அதிகாரியாக பணிபுரிந்த கர்னல் மன்பிரீத் சிங் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி ஜம்மு காஷ்மீரின் கடோல் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் சேர்ந்து மேலும் 3 பேரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். 

இந்திய ராணுவத்துக்கு கர்னல் மன்பிரீத் சிங் செய்த சேவையை கெளரவிக்கும் வகையில் 'கீர்த்தி சக்கரா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்னல் மன்பிரீத் சிங் ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் லார்கிபோரா, சல்தூரா மற்றும் கோகர்நாக் ஆகிய இடங்களில் மிகவும் துணிச்சலுடன் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததால் அப்பகுதி மக்களால் ஹீரோ என அழைக்கப்பட்டு வந்தார்.

கர்னல் மன்பிரீத் சிங் தலைமைப் பண்பு,  துணிச்சல் மற்றும் தன்னலமற்ற தியாகத்துக்கு பெயர் போனவர் என ஜம்மு காஷ்மீர் மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். மன்பிரீத் சிங்கின் சொந்த ஊர் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகில் உள்ள பரோஞ்சியன் என்ற சிறிய கிராமம் ஆகும். இவருக்கு மனைவியும், 6 வயதில் மகனும், 2 வயது மகளும் உள்ளனர். மன்பிரீத் சிங்கின் பதவிக்காலம் முடிவடைய 4 மாதங்கள் இருந்த நிலையில் அவர் வீர மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிக அழகிய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டும் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் வைஷ்ணவிதேவி கோயிலுக்கு சென்ற பக்தர்களின் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 10 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 8ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டம் பட்னோடா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.