பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூருவில் நாட்டிலேயே மிக அதிகமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான ஐடி ஊழியர்கள் பெங்களூருவில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தியாவின் 'ஹைடெக் நகரம்' என அழைக்கப்படும் பெங்களூருவில் வணிக நிறுவனங்கள், மால்கள், நட்சத்திர ஹோட்டல்கள் பல்கிப்பெருகி உள்ளன. இதனால் பெங்களூரு நகரம் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி வருகிறது.
பெங்களூரு 24 மணி நேரமும் வணிகம் நடைபெறும் நகரம் என்பதால், அங்கு மது விற்பனை செய்யும் ஃபார்கள், ஃபப்கள் மற்றும் ரெஸ்டாரெண்டுகளை நள்ளிரவு 1 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஹோட்டல் அசோசியேஷன் நிர்வாகிகள் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர். இந்நிலையில், இதை ஏற்றுள்ள கர்நாடக அரசு, பெங்களூருவில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்கள், ஃபார்கள், ஃபப்களை நள்ளிரவு 1 மணி வரை திறந்து வைக்க அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளதன்மூலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், ஃபார்கள், ஃபப்களில் இனிமேல் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்யப்படும். கர்நாடக அரசின் அறிவிப்புக்கு நட்சத்திர ஹோட்டல்களின் உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே வேளையில் இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
''பெங்களூருவில் ஏற்கெனவே நகரம் முழுவதும் ஏராளமான மதுக்கடைகள் பெருகிக் கிடக்கின்றன. இதன்மூலம் நகரத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது நள்ளிரவு 1 மணி வரை ஃபார்கள், ஃபப்களை திறக்க வைக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மது குடிப்பவர்களை அரசே ஊக்குவிப்பது வெட்கக்கேடானது'' என்று பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களூருவில் கர்நாடக அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. பெங்களூருவில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவு 1 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படும் என்று சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் சித்தராமையா அறிவித்து இருந்தார்.
இதேபோல் கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் நிர்வாகப்பணியில் 50%, நிர்வாகமல்லாத பணிகளில் 75% என கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டமசோதாவை கர்நாடக அரசு கொண்டு வந்தது. இதற்கு முன்னணி நிறுவனங்கள் குறிப்பாக ஐடி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
சில ஐடி நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்வதாக மிரட்டல் விடுத்தன. இந்த மிரட்டலுக்கு பணிந்த முதல்வர் சித்தராமையா, தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் சட்டமசோதாவை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.