Haryana Assembly Elections 2024 : ஹரியானாவில் இன்று (அக்டோபர் 5) ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அக்டோபர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் முக்கிய கட்சிகளான பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்தனியே நின்று தேர்தலை சந்திக்கின்றன. ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
மாநிலம் முழுவதும் தேர்தல் நடைபெறும் 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளையும் சேர்த்து 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர். 462 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா முழுவதும் 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,07,75,957 ஆண்கள், 95,77,926 பெண்கள் மற்றும் 467 மூன்றாம் பாலின வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். தொடர்ந்து 3ஆவது முறை ஆட்சியை பிடிக்க பாஜகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.