இந்தியா

ரூ.2000-க்கு மேல பணம் அனுப்புனா GST உண்டா..? மத்திய அரசு விளக்கம்

ரூ.2000-க்கு மேற்பட்ட ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற செய்திக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

ரூ.2000-க்கு மேல பணம் அனுப்புனா GST உண்டா..? மத்திய அரசு விளக்கம்
ரூ.2000-க்கு மேல பணம் அனுப்புனா GST உண்டா..? மத்திய அரசு விளக்கம்
இந்த நவீன காலத்தில் பெரும்பாலும் மக்கள் யுபிஐ செயலிகள் மூலமாகவே பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். யுபிஐ செயலிகளான போன்பே (Phone pe), ஜிபே (Gpay) உட்பட பிற செயலிகள் மூலம் நாம் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனைக்கு தற்போது வரை எந்த கட்டணமும், வரியும் விதிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.

யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி

அதாவது, யுபிஐ செயலிகள் மூலம் ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் ஐந்து சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டம் குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்பாக மத்திய அரசு முடிவு செய்யும் என செய்திகள் பரவியது. ஏற்கனவே பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி மக்கள் செலுத்தி வரும் நிலையில் தற்போது யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டுமா? என்று பலரும் அதிர்ச்சியுடன் இணையத்தில் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

மத்திய அரசு விளக்கம்

இந்த நிலையில், அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம் என்றும் ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. முற்றிலும் தவறானது. இதுபோன்ற எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.