இந்தியா

16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை.. காரணம் இதுதான்?

16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது.

16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை.. காரணம் இதுதான்?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தான் மக்களை வெளியேற்றுதல் ஆகியவை இந்தியா கொடுத்த பதிலடியில் முக்கிய அம்சங்களாகும். இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தானியர்களின் விசா ஏப்ரல் 29-ஆம் தேதியுடன் முடியவடைய உள்ளது.

எதற்காக யூடியூப் சேனலுக்கு தடை?

இந்நிலையில் 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பாக இந்திய நாட்டின் மீதும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராகவும் ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத கிளர்ச்சியினை தூண்டும் வகையில் உள்ளடக்கத்தை கொண்டு தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வந்த பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் 16 யூடியூப் சேனல்கள் உள்துறை அமைச்சகத்தால் கண்டறியப்பட்டுள்ளன.

பொய் கதைகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக அந்த 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியாவில் தடை செய்ய உள்துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், dawn news, irshad bhatti, samaa tv, ary news, suno news, uzair cricket உட்பட மொத்தம் 16 பாகிஸ்தானிய சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 16 சேனல்களின் ஒட்டுமொத்த Subscriber-களின் எண்ணிக்கை 63.08 மில்லியன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.