சினிமா

மீண்டும் வெளியாகும் ‘விடாமுயற்சி’.. எப்போது தெரியுமா?

அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம்  மார்ச் 3-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

மீண்டும் வெளியாகும் ‘விடாமுயற்சி’.. எப்போது தெரியுமா?
மீண்டும் வெளியாகும் ‘விடாமுயற்சி’

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் 'துணிவு’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன்,  ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர், ரம்யா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டார். ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு\ஏ சான்றிதழ் வழங்கியது. இப்படம் கடந்த 5-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ’துணிவு’ திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது.

தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்கின் முன்பு குவிந்தனர்.  திரையரங்குகளின் வாயில்களில் வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து ஆடல், பாடல் உடன் பட வெளியீட்டை கொண்டாடினர். நடிகை திரிஷா, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ஆரவ் ஆகியோர் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் பார்த்தனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. பெரும்பாலும் சமூக வலைதளங்களில் ‘விடாமுயற்சி வீண் முயற்சி’ என்ற ஹேஸ்டேக்குகளும் வைரலானது. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Vidaamuyarchi Twitter Review: விடாமுயற்சி வீண் முயற்சியா..? அஜித் வெற்றி பெறுவாரா..? எக்ஸ் விமர்சனம் இதோ

இந்நிலையில், ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.