நடிகர் மனோஜ் பாரதிராஜா தன் தந்தை போன்று பெரிய இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவர் முன்னணி இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்துள்ளார்.
இதையடுத்து, பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, பல படங்களில் கதாநாயகனாகவும், குணசித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
‘அன்னக்கொடி’ திரைப்படத்தில் மனோஜ் பாரதிராஜாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை மனோஜ் பாரதிராஜா நிறைவேற்றினார். முற்றிலும் புது முகங்களுடன் உருவான இந்த படத்தில் மனோஜ் பாரதிராஜாவின் தந்தை பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் இருதய பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வெடுத்து வந்த மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் அஞ்சலி
இந்நிலையில், மனோஜ் பாரதிராஜா உடலுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.