ஹைதராபாத்: இந்திய திரையுலகில் டோலிவுட் ஸ்டைலில் யாராலும் மாஸ் படங்கள் எடுக்க முடியாது. அதிலும் பாலய்யா என்ற பாலகிருஷ்ணா போல், மாஸ் காட்ட இந்தியாவில் ஹீரோவே கிடையாது. சூப்பர் ஸ்டார் ரஜினியே பாலகிருஷ்ணாவின் மாஸ் சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். தெலுங்கு ரசிகர்களும் இவரை மாஸ் கடவுள் என கொண்டாடி வருகின்றனர். பாலய்யாவின் படங்களில் 100% லாஜிக்கே இருக்காது, ஆனாலும் கமர்சியலாக ஹிட் அடித்துவிடும். அப்படியொரு படம் தான் பாலய்யாவின் அகண்டா.
பொயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான இந்தப் படம், டோலிவுட்டையே அதிர வைத்தது. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அகண்டா, பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மரண மாஸ் காட்டியது. ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில், படம் முழுக்க ஹை டெசிபல் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விட்டிருந்தார் பாலய்யா. திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் அகண்டா திரைப்படம் சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
அகண்டா - 2 தாண்டவம் என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தையும் பொயபட்டி ஸ்ரீனு இயக்குகிறார். அதேபோல் முதல் பாகத்தைத் தொடர்ந்து அகண்டா பார்ட் 2-வுக்கும் தமன் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனத்தின் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, ஆகியோருடன் தேஜஸ்வினி நந்தமூரி இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பூஜை விழாவில், பாலய்யா தனது மகள்களுடன் கலந்துகொண்டார். அதேபோல், தெலுங்கு திரையுலக பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அகண்டா 2 படத்தின் பூஜை முடிந்து கேமரா சுவிட்ச் ஆன் செய்ததும், தனது ஸ்டைலில் பவர் ஃபுல்லான பஞ்ச் டயலாக் பேசி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் பாலகிருஷ்ணா. அப்போது அனைவரும் “ஜெய் பாலய்யா... ஜெய் பாலய்யா” என முழுக்கமிட, பாலகிருஷ்ணாவின் ரியாக்ஷன் வேற லெவலில் இருந்தது. அகண்டாவில் நாயகியாக நடித்த பிரக்யா ஜெய்ஸ்வால், இப்படத்திலும் பாலாய்யாவுக்கு ஜோடியாக கமிட்டாகியுள்ளார். அகண்டா 2ம் பாகம் பூஜை நிகழ்ச்சியில், படத்தின் டைட்டில் தீம் டீசரும் வெளியிடப்பட்டது. தமன் இசையில் உருவாகியுள்ள இந்த டைட்டில் டீசரும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதிக எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் அகண்டா பார்ட் 2, பான் இந்தியா ஜானரில் ரிலீஸாகவுள்ளது. இதனால் அகண்டா முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.