சென்னை: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த மாதம் 20ம் தேதி வெளியான லப்பர் பந்து படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் லீடிங் ரோலில் நடித்திருந்த இந்தப் படம், யாருமே எதிர்பார்க்காத வகையில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. காளி வெங்கட், சஞ்சனா, சுவாஸிகா, தேவதர்ஷினி, பால சரவணன் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர். அதேபோல், கேப்டன் விஜயகாந்தின் ‘பொட்டு வைத்த தங்கக் குடம்’ பாடலும், அவரது போஸ்டர்களும் படம் முழுக்க ரசிகர்களுக்கு வைப் கொடுத்தன.
மினிமம் பட்ஜெட்டில் பெரிய ப்ரோமோஷன்கள் எதுவும் இல்லாமல் வெளியான லப்பர் பந்து படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். கதை, திரைக்கதை, மேக்கிங், கேரக்டர்கள் செலக்ஷன், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் என ஆல் இன் ஆல் எல்லா ஏரியாக்களிலும் கெத்து காட்டியது லப்பர் பந்து. கெத்து என்ற கேரக்டரில் விஜயகாந்த் ரசிகனாக அட்டகத்தி தினேஷும், அன்பு கேரக்டரில் விஜய் ரசிகனாக ஹரிஷ் கல்யாணும் செமையாக ஸ்கோர் செய்திருந்தனர். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் ரசிகர்களுக்கு போர் அடிக்காத வகையில் இயக்கியிருந்தார் தமிரசன் பச்சமுத்து.
இதனால் படம் வெளியான நாள் முதல் இப்போது வரையிலும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குறையவில்லை. மேலும் இந்தப் படம் இதுவரை 33 முதல் 40 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படம், தற்போது ஓடிடி ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது. அதன்படி, லப்பர் பந்து நாளை மறுநாள் (அக்.18) சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதேநேரம் சிம்பிளி சவுத் தளத்தில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் இந்தப் படம், இந்தியாவில் மட்டும் இப்போதைக்கு பார்க்க முடியாது.
இது ஓடிடி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், விரைவில் இன்னொரு சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, லப்பர் பந்து இன்னும் ஓரிரு வாரங்களுக்குப் பின்னர் டிஸ்னி ப்ளஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் என சொல்லப்படுகிறது. லப்பர் பந்து படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களும் ஓடிடி ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர். இதனால் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான பின்னரும் லப்பர் பந்து படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் செம ரீச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.