சினிமா

33 வருடத்தில் முதல்முறையாக நிகழ்ந்த அதிசயம்-அட்லீக்கு நன்றி சொன்ன ஷாருக்கான்

அட்லீ ஒரு அதிர்ஷ்டம். அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என நடிகர் ஷாருக்கான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

  33 வருடத்தில் முதல்முறையாக நிகழ்ந்த அதிசயம்-அட்லீக்கு நன்றி சொன்ன ஷாருக்கான்
இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் ஷாருக்கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தனது திரையுலக வாழ்க்கையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். "ஜவான்" திரைப்படத்தில் அவர் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இது ஷாருக்கானின் 33 வருட திரைப்பயணத்தில் அவருக்கு கிடைத்த முதல் தேசிய விருதாகும்.

அட்லீ ஒரு அதிர்ஷ்டம்

விருது அறிவித்த்தைத் தொடர்ந்து, ஷாருக்கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில், "இந்த தேசிய விருது எனக்கு ஒரு சாதனை மட்டுமல்ல, நான் செய்யும் செயல்கள் அர்த்தமுள்ளவை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு நினைவூட்டல். இந்த அங்கீகாரம், என்னை மேலும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது" என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.



"ஜவான்" திரைப்படத்தின் இயக்குநர் அட்லீக்கு ஷாருக்கான் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். "அட்லீ ஒரு அதிர்ஷ்டம். அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த விருதுக்கு நான் தேர்வானதுக்கு காரணமான தேசிய விருது தேர்வுக்குழு, என் குடும்பம் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ஷாருக்கான் கூறினார்.

திறமைக்கு அங்கீகாரம்

ஷாருக்கானின் இந்த வெற்றி, இந்தியத் திரையுலகில் அவரது அர்ப்பணிப்புக்கும் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜவான். இந்த திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான் நேற்று 71வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜவான் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.