சினிமா

'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் புதிய படம்.. வெளியான அறிவிப்பு!

'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் புதிய படம்.. வெளியான அறிவிப்பு!
Manjummel Boys director's next film
'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அதன் இயக்குநர் சிதம்பரம் தனது அடுத்த படத்தின் பெயரை அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு 'பாலன் - தி பாய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, கோவளத்தில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

சிதம்பரம், 'ஜான் ஈ மன்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றார். அதையடுத்து, கடந்த ஆண்டு வெளியான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் தமிழில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாகவும், உலகளவில் ரூ. 225 கோடி வரையிலும் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் 'பாலன் - தி பாய்' படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் திரைக்கதையை, 'ஆவேஷம்' படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் நடிக்க ஆடிஷன் மூலம் புதுமுகங்களை படக்குழு தேர்வு செய்துள்ளது.

இந்தப் படத்தின் தலைப்பு, 1938-ஆம் ஆண்டு வெளியான மலையாளத்தின் முதல் பேசும் படமான 'பாலன்' என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது. இது படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு அம்சமாக உள்ளது. வெளியாகி உள்ள படத்தின் தலைப்பு போஸ்டரில், ஒரு சிறுவன் வெறுங்காலுடன், கையில் ஒரு குச்சியுடன் நடப்பது போன்ற ஓவியம் இடம்பெற்றுள்ளது.

'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அதே தொழில்நுட்பக் குழுவை இயக்குநர் சிதம்பரம் இந்தப் படத்திலும் மீண்டும் இணைத்துள்ளார். அதன்படி, இசை சுஷின் ஷியாம், ஒளிப்பதிவு ஷைஜு காலித், எடிட்டிங் விவேக் ஹர்ஷன், கலை இயக்கம் அஜயன் சலிசேரி ஆகியோர் இந்தப் படத்திலும் பணியாற்றுகின்றனர்.

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மலையாளத் திரையுலகில் இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். இந்நிறுவனம், விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' மற்றும் யஷின் 'டாக்ஸிக்' போன்ற பெரிய பான்-இந்திய திட்டங்களையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.