சினிமா

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிரான மாதம்பட்டி ரங்கராஜின் மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிரான மாதம்பட்டி ரங்கராஜின் மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Madhampatti Rangaraj petition against Joy Crisilda dismissed
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த திருமண மோசடிப் புகார் தொடர்பான சர்ச்சையில், ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக ரங்கராஜின் தந்தை நடத்தும் ‘மாதம்பட்டி பாகசாலா’ நிறுவனம் தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் மற்றும் புகார் பின்னணி

கேட்டரிங் சேவை மூலம் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். 2023 ஆம் ஆண்டு தங்களுக்குத் திருமணம் நடைபெற்றதாகவும், தான் கருவுற்ற நிலையில் ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நிறுவனத்தின் வழக்கு மற்றும் இழப்பீடு கோரிக்கை

இந்தச் சர்ச்சைகளின் மத்தியில், ஜாய் கிரிசில்டா வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளால் தங்கள் நிறுவனத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி ரங்கராஜின் தந்தை நடத்தி வரும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குற்றம் சாட்டியது. ஜாய் கிரிசில்டாவின் பதிவுகளால் ரூ.12 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தைத் தொடர்புபடுத்திச் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட ஜாய் கிரிசில்டாவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள்

கிரிசில்டாவின் பதிவுகளால் ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் வரை ரூ.11.21 கோடிக்குக் கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகிவிட்டன என்றும், அதனால் சமூக வலைதளப் பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

மேலும், தான் பதிவிட்ட கருத்துக்களுக்கும், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கிரிசில்டா தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், 11 கோடி இழப்பு எனக் கூறும் நிறுவனம், ஆர்டர்கள் எப்போது முன்பதிவு செய்யப்பட்டன, எப்போது ரத்து செய்யப்பட்டன போன்ற விவரங்களைச் சரியாகத் தெரிவிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். செந்தில்குமார், தடை கோரிய மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில் குமார், ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.