சினிமா

‘கிங்டம்’ பட சர்ச்சை.. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

'கிங்டம்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘கிங்டம்’ பட சர்ச்சை.. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
High Court orders to provide security to movie theaters
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 31 ஆம் தேதி வெளியான ‘கிங்டம்’ திரைப்படம், ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்ததாகக் கூறி தமிழகத்தில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

இந்தப் படத்தில் தமிழ் ஈழப் பிரச்சனை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து, 'கிங்டம்' படத்துக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ புரொடெக்சன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, " சென்சார் போர்டு அனுமதித்த திரைப்படத்தைத் திரையிடுவதை யாரும் தடுக்க முடியாது. படத்தைத் திரையிட எவரேனும் இடையூறு விளைவித்தால், திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதே நேரத்தில், "உரிய அனுமதி பெற்று, போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உரிமை உள்ளது" என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "’கிங்டம்’ படத்தின் கதை முழுவதும் கற்பனையானது என ஏற்கெனவே படத்தின் மறுப்புப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ் மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.