சினிமா

வேடனா? வேட்டையனா? மேலும் 2 பாலியல் புகார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகர் வேடனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேடனா? வேட்டையனா? மேலும் 2 பாலியல் புகார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Kerala Rapper Vedan Faces Multiple Sexual Assault Allegations Amidst Bail Hearing
கேரளாவில் ராப் இசையால் இளைஞர்களைத் தன்வசம் ஈர்த்து வந்த பிரபல இசை கலைஞரான வேடன் (ஹிரந்தாஸ் முரளி) மீது பாலியல் வழக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், எர்ணாகுளம் மாவட்டத்திற்குட்பட்ட திருக்காக்கரை போலீசார் வேடன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் 2 பாலியல் புகார்:

முதலில் வேடன் மீது பெண் மருத்துவர் புகார் அளித்தார். கோட்டயம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரில், வேடன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துப் பலமுறை உடலுறவு மேற்கொண்டதாக கூறியுள்ளார். ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரை வேடன் தன்னுடன் உறவு வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திருமண ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வேடன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (2) (n) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேடன் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார், அது ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. முன்ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வேடனும் தலைமறைவாகினார். இந்நிலையில், வேடன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லக்கூடும் என போலீசார் தரப்பு கருதியதால், வேடனுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இன்று முன்ஜாமீன் தொடர்பான வழக்கின் விசாரணை நடைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

இரண்டு பெண்கள் முதல்வர் அலுவலகத்தில் புகார்களை அளித்தனர். இரு பெண்களும் முதலமைச்சரை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து விளக்க நேரம் கேட்டுள்ளனர். புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு சம்பவங்களும் 2020-2021 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நடந்தன.

பட்டியலிடப்பட்ட சாதிகள் இசை குறித்த ஆராய்ச்சிக்காக வேடனை தொலைபேசியில் அழைத்த பெண்ணை கொச்சிக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். பாலியல் சீண்டலை எதிர்த்தபோது தான் கொடூரமாக துன்புறுத்தப்பட்டதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். வேடனின் இசை நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்ட நிலையில், ஒரு நட்பு உறவை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டாவது பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகி வந்த வேடனின் பாடல்கள்:

வேடன் என அறியப்படும் ஹிரந்தாஸ் முரளியின் தந்தை கேரளாவை சேர்ந்தவர். தாய் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஆவார். 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில், யூடியூபில் வெளியான இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் பரவலான கவனம் பெற்றார். "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் அழுத்தமாகப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து, 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற சில படங்களிலும் இவர் பாடல்களைப் பாடியுள்ளார்.

சமீபத்தில் மலையாள திரையுலகில் ஹிட்டடித்த டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் வெளியான 'நரிவேட்டை' படத்திலும் பழங்குடியினரின் போராட்டம் பற்றி 'வாடா வேடா' என்ற பாடலை எழுதிப் பாடவும் செய்திருந்தார் வேடன்.

தனது ராப் இசைப் பாடல்களை இவரே எழுதி பல மேடைகளில் பாடி, கேரளாவில் மட்டுமின்றி தென் இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்களை வசீகரித்து வந்தார். இந்நிலையில், இவர் மீது அடுத்தடுத்து பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.