சினிமா

கலா மாஸ்டர் வைரல் வீடியோ.. 'முத்த மழை குத்து பாடல்' குறித்து Spotify ட்வீட்!

முத்த மழை பாடலை குத்துபாடலாக மாற்றி, கலா மாஸ்டர் நடனமாடிய வீடியோவுடன் ஒட்டி எடிட் செய்தது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஸ்பாட்டிபை இந்தியா இதுக்குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கலா மாஸ்டர் வைரல் வீடியோ.. 'முத்த மழை குத்து பாடல்' குறித்து Spotify ட்வீட்!
Kala Master Viral Muththa Mazhai Dance Video Catches Spotify Indias Attention
மணிரத்னம் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, கமல்-சிம்பு கூட்டணி என பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் ”தக் லைஃப்" திரைப்படமானது கடந்த ஜூன் 5, 2025 அன்று வெளியானது. படம் எதிர்ப்பார்த்த பாக்ஸ் ஆபிஸ் வெற்றியினை பெறாத போதிலும், தக் லைஃப் படத்தின் ஆல்பத்தில் இடம்பெற்ற சில பாடல்கள் மெகா ஹிட் அடித்தது.

அதிலும் குறிப்பாக "முத்த மழை" பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. ஆல்பத்திற்காக உருவாக்கப்பட்ட பாடலினை, பாடகி தீ பாடியிருந்தார். ஆடியோ வெளியீட்டு நிகழ்விற்கு பாடகி தீ வர முடியாத காரணத்தினால் “முத்த மழை” பாடலை சின்மயி பாடினார்.

ரசிகர்கள் மத்தியில் சின்மயி பாடிய வெர்ஷன் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சின்மயி வெர்ஷனில் “முத்த மழை” பாடலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரே வெளியிட்டார்கள். படத்தில் பாடகி தீ வெர்ஷன் இடம்பெறுமா? சின்மயி வெர்ஷன் இடம்பெறுமா? என ரசிகர்கள் ஆவலோடு படம் பார்க்க சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதற்கு காரணம், படத்தில் இப்பாடலின் எந்த வெர்ஷனும் இடம் பெறவில்லை. தக் லைஃப் திரைப்படமே திரையரங்குகளை விட்டு வெளியேறிய நிலையில், இன்னும் சமூக வலைத்தளத்தில் “முத்த மழை” பாடல் ஏதோ ஒரு வகையில் டிரெண்டிங்கில் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.

வைரலாகும் கலா மாஸ்டர் வீடியோ:

சமீபத்தில் சம்மந்தமே இல்லாமல், எப்போதோ நடந்த மானாட மயிலாட சீசனில் நடன இயக்குநர் கலா மாஸ்டர் ஆடிய ஆட்டம் மீம் மெட்டீரியலாக இணையத்தில் வைரலாகியது. உண்மையில் குத்து சங்கு ஒன்றுக்கு தான் கலா மாஸ்டர் ஆடியிருப்பார். அந்த பாடலுக்கு மாற்றாக வேற வேற பாடலை பின்னணியில் சேர்த்து இணையத்தில் பதிவிட்டு வந்தனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில், ”முத்த மழை” பாடலை குத்து பாடலாக அதன் ஸ்பீடை மாற்றி, கலா மாஸ்டர் ஆடுவது போல் வீடியோ உருவாக்கி இணையத்தில் யாரோ பதிவிட, அது படு வைரலாக மாறியது. இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் “முத்த மழை” பாடலின் தீ வெர்ஷன், சின்மயி வெர்ஷன் போன்று குத்து பாடல் வெர்ஷன் எப்போது வரும்? என படக்குழுவினரே டேக் செய்யத் தொடங்கினர்.




கவனம் ஈர்த்த Spotify ட்வீட்:

இதற்கு மத்தியில் இசை சார்ந்து செயல்படும் முன்னணி நிறுவனமான “ஸ்பாட்டி பை (இந்தியா)” தனது எக்ஸ் வலைத்தளத்தில் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளது. அதில், “மன்னிக்கவும். முத்த மழை குத்து வெர்ஷன் எங்களிடம் இல்லை” என குறிப்பிட்டுள்ளது. இதை ரீ-ட்வீட் செய்து ரசிகர் ஒருவர் #Justiceforkalamaster என குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில பயனர்கள் எடிட் செய்யப்பட்ட கலா மாஸ்டர் வீடியோவினை பதிவிட்டு எங்களுக்கு முத்த மழை குத்துபாடல் வேண்டுமென கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

யூடியுப் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ள ”முத்த மழை” சின்மயி வெர்ஷன் பாடலானது 62 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.