80-களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடிகரும் இயக்குநருமான, பாண்டியராஜன் இயக்கத்தில் 1985-ஆம் ஆண்டு வெளியான, 'ஆண் பாவம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த சீதாவிற்கு தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது.
இவர், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானார். நடிகை சீதா தற்போது பல படங்களில் அம்மா தோற்றங்களிலும், கெளரவ தோற்றங்களிலும் நடித்து வருகிறார்.
சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியில் தனது குடும்பத்தோடு வசித்து வரும் சீதா அவ்வப்போது தனது மாடித்தோட்டம் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 31-ஆம் தேதி சீதாவின் சகோதரனின் மனைவி கல்பனா தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி சிறிய ஹேன்ட் பேக்கில் வைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார்.
பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது ஹேன்ட் பேக்கில் வைத்திருந்த இரண்டரை சவரன் தங்க கம்மல், இரண்டு சவரன் தங்க செயின் ஆகியவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். எங்கு தேடிப்பார்த்தும் நகைகள் கிடைக்காததால் நடிகை சீதா நவம்பர் 2-ஆம் தேதி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் திறந்த வீட்டில் திருட்டு நடந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் வீட்டின் பணிப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோன்று கடந்த 6-ஆம் தேதி இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது. இதுதொடர்பாக பார்த்திபன் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் நகைகளை திருடிய ஊழியரே அதனை திருப்பி கொடுத்ததால் பார்த்திபன் வழக்கை வாபஸ் வாங்கினார்.
நடிகை சீதாவும், இயக்குநர் பார்த்திபனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனமுறிவு காரணமாக விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.