சினிமா

“என் சாதனையை முறியடித்ததற்கு வாழ்த்துகள்!” – நடிகர் கமல்ஹாசன்

தனது சாதனையை முறியடித்த 4 வயது குழந்தை நட்சத்திரத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து

“என் சாதனையை முறியடித்ததற்கு வாழ்த்துகள்!” – நடிகர் கமல்ஹாசன்
4 வயதில் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற ட்ரீஷா தோசருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
71-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில், பல்வேறு பிரிவுகளில் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகருக்காக ஷாருக்கான் ('ஜவான்' படத்திற்காக) மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி ('12th Fail' படத்திற்காக). இருவருக்கும் இந்த விருதுகள் சமமாகப் பகிரப்பட்டன.
சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி ('Mrs. Chatterjee vs Norway' படத்திற்காக வழங்கப்பட்டது. சிறந்த படமாக விது வினோத் சோப்ரா இயக்கிய '12th Fail' விருது வாங்கியது.

4 வயது குழந்தை நட்சத்திரத்திற்கு விருது

சிறந்த இயக்குநராக சுதிப்தோ சென் ('தி கேரளா ஸ்டோரி' படத்திற்காகவும், தாதா சாகேப் பால்கே விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த குணசித்திர நடிகையாக ஊர்வசிக்கும், சிறந்த குணசித்திர நடிகராக எம்.எஸ்.பாஸ்கருக்கும் தேசிய விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. இதேபோல் தமிழில் பார்க்கிங் படம் மொத்தம் 3 விருதுகளை வாங்கியது. அதேபோல் ஜி.பி. பிரகாஷ்குமாருக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகள், இந்தியத் திரையுலகின் பல்வேறு மொழித் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு, இந்திய சினிமாவின் பன்முகத்தன்மையைக் கொண்டாடியது.

71-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில், மராத்தி மொழித் திரைப்படமான 'நால் 2' (Naal 2) படத்தில் நடித்த 4 வயது குழந்தை நட்சத்திரமான ட்ரீஷா தோசர், சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை வென்றுள்ளார்.

சாதனையை முறியடித்ததற்கு வாழ்த்துகள்

இந்த நிலையில் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது வென்ற ட்ரீஷா தோசரை ஷாருக்கான் உள்ளிட்டோர் ரசித்து பார்த்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் 4 வயது குழந்தை நட்சத்திரமான ட்ரீஷா தோசருக்கு என் சாதனையை முறியடித்ததற்கு வாழ்த்துகள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன், "நான் எனது 6 வயதில் எனது முதல் விருதை வென்றேன். அந்த சாதனையை முறியடித்த ட்ரீஷா தோசருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

பெரியவர்களுக்கும் எனது பாராட்டுகள்

நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும். உங்களது அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் எனது பாராட்டுகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.



கமல்ஹாசனின் இந்த வாழ்த்து, குழந்தை நட்சத்திரமான ட்ரீஷா தோசரை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.