சினிமா

Coolie: கூலி படத்தில் இணைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்... தலைவரை காப்பாற்றுவாரா அமீர்கான்..?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Coolie: கூலி படத்தில் இணைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்... தலைவரை காப்பாற்றுவாரா அமீர்கான்..?
ரஜினியின் கூலி படத்தில் இணையும் அமீர்கான்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படம், ரசிகர்களிடம் எதிர்பார்த்தளவில் வரவேற்பைப் பெறவில்லை. இரண்டு தினங்களில் 100 முதல் 130 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வேட்டையன் கலெக்ஷன் பற்றியெல்லாம் அதிகம் யோசிக்காமல், கூலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். அதேபோல், ரஜினியுடன் நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதையும் படக்குழு அபிஸியலாக அறிவித்துவிட்டது. இதனையடுத்து கூலி படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், கடந்த வாரம் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் சூப்பர் ஸ்டார், இன்னும் ஒரு வாரத்தில் கூலி படப்பிடிப்பில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூலி படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இதுபற்றி கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தாலும், படக்குழு தரப்பில் இருந்து அபிஸியலாக அறிவிக்கவில்லை. ஆனால், அமீர்கான் கேமியோவாக நடிக்கவிருப்பதாகவும், அவரது காட்சிகளை சென்னையில் படமாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அமீர்கானுடன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரஜினியின் ஜெயிலர் படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியோவாக நடித்திருந்தனர். அதேபோல் தற்போது வெளியாகியுள்ள வேட்டையன் படத்திலும் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா என பான் இந்தியா நடிகர்கள் ரஜினியுடன் நடித்திருந்தனர். அதேபோல் கூலி படத்திலும் நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர் ஆகியோர் கமிட்டான நிலையில், பாலிவுட்டில் இருந்து அமீர்கானையும் களமிறக்க முடிவு செய்துள்ளது படக்குழு. அமிதாப் பச்சன் இருந்தும் வேட்டையன் படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், கூலி படத்தின் வெற்றிக்கு அமீர்கான் கை கொடுப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.          

அமீர்கான் நடிப்பில் கடைசியாக வெளியான Thugs of Hindostan, Lal Singh Chadda படங்கள் படுதோல்வியடைந்தன. முக்கியமாக Lal Singh Chadda படம் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகிய அமீர்கான், தற்போது ரஜினியின் கூலி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதனால் பாலிவுட்டிலும் ரஜினியின் கூலி படத்துக்கு செம ஹைப் ஏற்பட்டுள்ளது.