சினிமா

'நாம் சரியான நபரைப் பின்தொடர்கிறோமா?' மாணவர்களுக்கு வெற்றிமாறன் அட்வைஸ்!

"நாம் சரியான ஆளைப் பின்தொடர்கிறோமா? என்பது நமக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்" என்று மாணவர்களுக்கு வெற்றி மாறன் அறிவுறுத்தினார்.

'நாம் சரியான நபரைப் பின்தொடர்கிறோமா?' மாணவர்களுக்கு வெற்றிமாறன் அட்வைஸ்!
Director Vetri Maran
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன், சென்னை உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மாணவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு மற்றும் சரியான இலக்கு நிர்ணயம் குறித்து அவர் பேசினார்.

அரசியல் என்பது வாக்கு மட்டுமல்ல

வெற்றிமாறன் பேசுகையில், "மனிதன் என்பவன் ஒரு சமூக-அரசியல் விலங்கு என்று கூறுவார்கள். அரசியல் என்றால் வெறும் வாக்கு அரசியல் மட்டுமல்ல. நாம் யார், நாம் எங்கு இருக்கிறோம்? எப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? அதை எப்படிச் செய்ய வேண்டும்? என்ற விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்" என்று வலியுறுத்தினார்.

சரியான தலைவரைப் பின்தொடர வேண்டும்

மாணவர்களாகிய நீங்கள் உங்கள் இலக்கை எதுவாக வைத்துக் கொள்ளப்போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், "அதில் முக்கியமாக, நாம் யாரைப் பின்தொடரப்போகிறோம்? எதற்காகப் பின்தொடரப்போகிறோம்? நாம் சரியான ஆளைப் பின்தொடர்கிறோமா? என்பது நமக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்" என்று கூறினார். குறைந்தபட்சம் எது சரி, எது தவறு, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதாவது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அரசியல் சாசன உரிமைகளில் சமரசம் வேண்டாம்

"மாணவர்களைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும் என்றும், நிறையப் படிக்க வேண்டும், வாசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "நமது அரசியல் சாசனம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமைகளான மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றைச் சமரசம் செய்துகொள்ளும் வகையில் யாராவது செயல்பட்டால், அத்தகைய நபர்கள் நம்மைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொண்டு, கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.