சினிமா

அஜித்-ஷாலினியின் 'அமர்க்களம்' திரைப்படம் ரீ-ரிலீஸ்!

'அமர்க்களம்' திரைப்படம் 26 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்-ஷாலினியின் 'அமர்க்களம்' திரைப்படம் ரீ-ரிலீஸ்!
Amarkalam Re Release
நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இணைந்து நடித்த 'அமர்க்களம்' திரைப்படம், 26 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பை இயக்குநர் சரண் வெளியிட்டுள்ளார்.

'அமர்க்களம்' படம் குறித்த சிறப்புத் தகவல்கள்

அஜித் 1993-ல் வெளிவந்த 'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் 'ஆசை', 'காதல் கோட்டை', 'வாலி', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்கள் அவருக்குப் பெரிய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. 1999-ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் காதல் காட்சிகளால் நிரம்பியிருந்தது. இதில் ஷாலினி அஜித்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரகுவரன், ராதிகா, நாஸர், அம்பிகா, வினு சக்ரவர்த்தி, சார்லி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அஜித்தின் 25-வது திரைப்படமான இந்தப் படம், அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் (ஷாலினியைத் திருமணம் செய்தது), திரை வாழ்க்கையிலும் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பரத்வாஜ் இசையில், கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார். பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தது படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தன.

ரீ-ரிலீஸ் அறிவிப்பு

நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை ஒட்டி, அஜித்-ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பை இயக்குநர் சரண் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 2026 பிப்ரவரி 12-ஆம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் தற்போது வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களைத் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகின்றனர். ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', விஜய்யின் 'கில்லி', 'சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டுள்ளன.