சினிமா

அஜித் பட நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்: நடிகை சொன்ன திடுக்கிடும் தகவல்!

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மற்றொரு நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் பட நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்: நடிகை சொன்ன திடுக்கிடும் தகவல்!
பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’, அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபல மலையாள நடிகை வின்ஸி அலோசியஸ் ‘சூத்திரவாக்கியம்' படப்பிடிப்பின் போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்தி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டினார்.

இது மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஷைன் டாம் சாக்கோ மீது போதைப்பொருள் பயன்படுத்தியது, அதனை தூண்டியது மற்றும் கிரிமினல் சதி செய்ததாக போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதற்காக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விசாரிக்க போலீசார் சென்றனர்.

கைது

ஆனால், போலீசை பார்த்ததும் ஷைன் டாம் சாக்கோ ஹோட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியில் குதித்து அங்கிருந்து நீச்சல் குளத்தில் தாவி படிக்கட்டு வழியாக தப்பி ஓடிவிட்டார். இந்த காட்சிகள் ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பாதிவாகியது. இதையடுத்து, ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

மற்றொரு நடிகை புகார்

இந்நிலையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோ தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை அபர்ணா ஜான் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “‘சூத்திரவாக்கியம்' படத்தில் நானும் நடித்தேன். நடிகை வின்ஸி அலோசியஸ் கூறியது 100 சதவிகிதம் உண்மை தான். அவர் வெள்ளை நிற பவுடரை உபயோகிப்பார். அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. அது குளுகோஸாக கூட இருக்கலாம்.

படப்பிடிப்பு தளத்தில் அவரின் நடவடிக்கை ஒழுக்கமற்ற முறையில் இருக்கும். ஷைன் டாம் சாக்கோவின் நடவடிக்கை எனக்கு மிகவும் அசெளகரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து நான் படப்பிடிப்பு புகார்கள் குழுவிடம் ( Internal Complaints Commiittee) உடனடியாக தெரிவித்தேன். அவர்கள் எனது காட்சிகளை திட்டமிட்ட நாளைக்கு முன்பே முடிக்க முயற்சி செய்தனர். வின்ஸி அலோசியஸ் போன்று நடிப்பதையை நான் தொழிலாக தொடர்ந்தால் சினிமா சூழல் பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதி செய்ய என்ன முடியுமோ அதை செய்வேன்” என்று கூறினார்.