Actor Riyaz Khan Exclusive Interview to Kumudham News : திரைத்துறையில் கடந்த சில நாட்களாகவே பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா ஷூட்டிங்கின்போது நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பாலியல் சீண்டல்கள் குறித்தும் நடிகைகள் குமுறி வருகின்றனர். அதுவும் திரைத்துறையில் ஆண் ஆதிக்கம் தலை விரித்து ஆடுவதாகவும் புகார்களை அடுக்கி வைக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக மலையாள சினிமாவில் பாலியல் சீண்டல்கள் உச்சத்தில் இருப்பதாக நடிகைகள் பலர் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மலையாள சினிமாவில் பெண் கலைஞர்களுக்கு எதிரான நடிக்கும் பாலியல் சீண்டல்களை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த கமிட்டி பல நடிகைகளிடம் விசாரணை நடத்தி கடந்த 2019ம் ஆண்டு அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இத்தனை ஆண்டுகளாக வெளியாகாத இந்த அறிக்கைகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், மலையாள நடிகை ரேவதி சம்பத், பிரபல நடிகர் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகார் கொடுத்துள்ளார் நடிகை ரேவதி சம்பத். கேமரா மேன் ஒருவரிடமிருந்து தனது மொபைல் நம்பரை வாங்கிய ரியாஸ் கான், தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் ஆபாசமாகப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரேவதி சம்பத்தின் தோழிகளை யாரேனும் தனக்கு அறிமுகம் செய்யும்படியும் ரியாஸ் கான் கேட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : பிச்சை எடுத்து வந்த பதவி அல்ல IPS பதவி.. வருண்குமார் - சீமான் உச்சக்கட்ட மோதல்
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து குமுதம் செய்திகளுக்காக நடிகர் ரியாஸ் கான் கொடுத்த பேட்டியில், “சென்னையில் இல்லாமல் கேரளாவில் இச்சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனக்கு அந்த பெண் யாரென்றே தெரியாது. அவர் என்ன பேசுகிறார் என்று கூட எனக்கு புரியவில்லை. இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரையுலகில் 33 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். 306 படங்களில் நடித்துள்ளேன். இதுவரை ஒரு முறை கூட என் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்ததில்லை. என் குடும்பத்தினருக்கும் சரி, என்னுடன் பணியாற்றிய சக நடிகைகளுக்கும் சரி நான் எப்படிப்பட்டவன் என்று தெரியும். என் மீது எந்த தவறும் இல்லை அதனால் நான் பயப்பட மாட்டேன். ஃபோனில் பேசியது நான்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? யார் வேண்டுமானாலும் என் பெயரை பயன்படுத்தி பேசியிருக்கலாம். அதற்கு நான் பொறுப்பாக முடியாது. கேரள அரசின் குழு விசாரணைக்கு அழைத்தால் விளக்கம் அளிப்பேன் ” என தெரிவித்துள்ளார்.