Kamal Haasan Had Announced His Retirement From Bigg Boss Show : ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி, பின்னர் கோலிவுட்டிலும் ஆதிக்கம் செலுத்தியது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை, கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதனால் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தனர். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் கமல் பிக் பாஸ் அரங்கிற்கு வருவதும், போட்டியாளர்களின் பஞ்சாயத்துகளை தீர்த்து வைப்பதும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
அதேபோல், ஒவ்வொரு வாரமும் கமல் செய்யும் புத்தக பரிந்துறை ரொம்பவே பிரபலமானது. இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் பிக் பாஸ் போட்டியை பார்க்கத் தொடங்கினர். ஒரு வீட்டுக்குள் திரும்பிய பக்கமெல்லாம் கேமரா வைத்துவிட்டு, ஆண்களையும் பெண்களையும் போட்டியாளர்களாக அனுப்புவதெல்லாம் பார்க்க சகிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் சில நேரங்களில் போட்டியாளர்கள் எல்லை மீறி போகும் சம்பவங்களும் நடைபெற்றன. ஹாலிவுட், பாலிவுட்டை விட இங்கு கொஞ்சம் கம்மி தான் என்றாலும், பிக் பாஸுடன் சேர்ந்து கமலும் வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனாலும் விஜய் டிவியின் டிஆர்பி கண்டெய்னரே இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவாக தான் இருந்தது.
பிக் பாஸ் ஷோ டெலிகாஷ்ட் ஆகும் 100 நாட்களில், மற்ற தொலைக்காட்சிகளில் எந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினாலும் அங்கு ரசிகர்கள் சுத்தமாக எட்டிப் பார்ப்பதுக் கூட கிடையாது. அந்தளவிற்கு இந்த ஷோ பிரபலமாக கமல்ஹாசன் ஒரு காரணமாக இருந்தார். ஆனால், திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது பிக் பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சிறிய ஓய்வு எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், சினிமா கமிட்மெண்ட்ஸ் அதிகம் இருப்பதால் வரும் பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்கவில்லை என அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க - தனுஷின் ராயன் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் உங்கள் இல்லங்களுக்கு வருகை தந்த எனக்கு, நீங்கள் கொடுத்த அன்பும் ஆதரவும் மறக்க முடியாது. நீங்கள் கொடுத்த ஆதரவு காரணமாக இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவாக பிக் பாஸ் தமிழ் காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மூலம் நிறையவே கற்றுக்கொண்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய விஜய் டிவி உட்பட பிக் பாஸ் குழுவினருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 8 வெற்றிப் பெற வாழ்த்துகள் எனவும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கவின், சாண்டி மாஸ்டர், ஆரவ் போன்ற பலர் நட்சத்திரங்களாக உருவாகினர். அதேநேரம் பிக் பாஸ் சீசன் 6, 7 ஆகிய இரண்டு சீசன்களிலும் பல சர்ச்சைகளும் எழுந்தன. அதாவது 6வது சீசனில் விக்ரமன் தான் வெற்றிப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசீம்க்கு பிக் பாஸ் டைட்டில் வழங்கப்பட்டது. அதேபோல், கடந்த 7வது சீசனில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட சம்பவமும் கமல்ஹாசன் மீது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை கொடுத்தது. ஒரு கட்டத்தில் கமல்ஹாசனுக்கு ரெட் கார்டு கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அப்போதே பிக் பாஸ் சீசன் 8-ஐ கமல்ஹாசன் தொகுத்து வழங்கமாட்டார் என சொல்லப்பட்டது.
இன்னும் சில மாதங்களில் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கவுள்ள நிலையில், கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தக் லைஃப், இந்தியன் 3, கல்கி இரண்டாம் பாகம், அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படம் என கமல்ஹாசன் 4 படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் நடந்து முடிந்த எம்பி தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு கொடுத்திருந்தார் கமல்ஹாசன். அதற்கு பலனாக அவர் விரைவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், பிக் பாஸில் இருந்து சிறிய ஓய்வு என கமல் அறிவித்துள்ளதால், ஒருவேளை மீண்டும் வருவாரோ எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.