Theppa Thiruvizha Madurai 2025 : உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாதத்தில் தைப்பூச தெப்பத் திருவிழா நடைபெறும். இவ்விழாவானது ஜனவரி 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் விழாவினை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதனிடையே நேற்று மதியம் சிந்தாமணி பகுதியில் கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் கதிரறுப்பு திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தைப்பூதச பௌர்ணமி தினமான இன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையில் மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி விளக்குத்தூண், கீழவாசல் காமராஜர்சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி மீனாட்சியம்மன் கோயிலின் உப கோயிலான மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தனர்.
பின்னர் அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளவுள்ளனர். நீர் நிரம்ப காணப்பட்ட தெப்பக்குளத்தில் சுவாமியும் அம்மனும் இருமுறை வலம்வரவுள்ளனர். இன்று இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி இரவு தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவர்.
இந்த தெப்ப உற்சவத்தின்போது சுவாமியும், அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினாலும் சுவாமியை விட அம்மன் கூடுதலாக ஒரு வாகனமான அவுதா தொட்டி வாகனத்தில் எழுந்தருளுவார் என்பது கூடுதல் சிறப்பு. தெப்பகுளத்தில் நீர்நிரம்பி இருப்பதால் தெப்பத்திலும் தீயணைப்புத்துறையினர், காவல் துறையினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாநகர காவல் ஆணையர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விழாவினையொட்டி அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து, மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பம் உற்சவம் நடைபெற்று, இரவு திருக்கோயிலுக்கு வந்து சேரும் வரை இன்று திருக்கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும். தெப்பத்திருவிழா நாளில் பக்தர்கள் நலன் கருதியும், வெளியூர்களிலிருந்து வருபவர்களின் நலன் கருதியும் கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) திறந்து வைக்கப்படும்.
உள்ளே வருபவர்கள் வடக்கு கோபுரம் வாசல் வழியாக காலை 07.00 மணி முதல் 12.30 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள். தெப்ப திருவிழாவினை முன்னிட்டு மதுரை மாநகர் தெப்பக்குளம் காமராஜர் சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.