Punnainallur Mariamman Temple : தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. இக்கோவிலில் அம்மன் புற்றாக உருவெடுத்து அருள் பாலித்து வருகிறார். இதன் காரணமாக மூலவரான அம்மனுக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் மட்டும் செய்யப்பட்டு வருகிறது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலில் வந்து வேப்பிலை விரித்து அதன் மீது படுத்து அம்மனை மனம் உருகி வேண்டிக் கொண்டால் அம்மை நோய் விலகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. தஞ்சை மட்டுமின்றி அண்டை மாவட்டங்கள் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்றது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் கோபுரங்கள் வர்ணம் பூசப்பட்டு புணரமைப்பு பணிகள் நிறைவு பெற்று இன்று (பிப். 10) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 7-ம் தேதி மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது. ஆறு கால பூஜைகள் பூரணா ஹதியுடன் நிறைவு பெற்றது.
சிவாச்சாரியார்கள் புனித நீர் குடத்தை தலையில் சுமந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வழியெங்கும் பக்தர்கள் மலர்கள் தூவி வரவேற்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் கொண்டு வந்தனர். விமான கோபுரம், ராஜகோபுரம், பரிவார தெய்வங்கள், கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் அம்மன் கோஷம் எழுப்பி பக்தி பரவசம் அடைந்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானங்கள் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது.