குமரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை இளம்பெண் கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை ஆசிரியருடன் வாக்குவாதம்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே இடைக்கோடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜான் கிறிஸ்டோபர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை இந்த பள்ளியில் ஒரு இளம்பெண் தனது குழந்தை இந்த பள்ளியில் படிக்கிறது எனவும் , குழந்தையை பார்க்க வேண்டும் எனவும் கூறி பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார்.
அப்போது அந்த குழந்தையின் தந்தை அந்த குழந்தையை பள்ளியில் கொண்டு சேர்த்தபோது எனது குழந்தையை யார் வந்து பார்க்க வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என கூறியிருப்பதாக தன்னிடம் கூறி உள்ளார் என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு
குழந்தையின் தகப்பனாரின் அனுமதி இருந்தால் மட்டுமே குழந்தையை பார்க்க முடியும் என அந்த இளம்பெண்ணிடம் கூறி உள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த அந்த இளம்பெண் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென அந்த பெண் தலைமை ஆசிரியர் கன்னத்தில் அறைந்து உள்ளார்.
தொடர்ந்து தலைமை ஆசிரியர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,முதல்கட்ட விசாரணையில் அந்த குழந்தையின் தாயார் தான் இந்த இளம்பெண் என்பதும் தெரியவந்துள்ளது.
போலீஸ் விசாரணை
இளம்பெண் கணவருடன் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதும், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதில் இரண்டு குழந்தைகள் தகப்பனாருடனும், ஒரு குழந்தை தாயாருடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. அருமனை போலீசாரும் தலைமறைவாகியுள்ள இளம்பெண்ணை தேடி வரும் நிலையில் தலைமை ஆசிரியரை பெண் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.