சட்டவிரோத மணல் கொள்ளை – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், அரசுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மெய்யூர், வேம்பேடு, ராஜபாளையம், சோமதேவன்பட்டு, எறையூர் கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்களிலும், கொசஸ்தலை ஆற்றுப் படுகையிலும் சட்டவிரோதமாக மணல் மற்றும் சவுடு மண் அள்ளுவதற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, கொசஸ்தலை ஆறு மற்றும் கனிமவள பாதுகாப்பு சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அதிகாரிகள் துணையுடன், கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் அதிகளவு மணல், சவுடு மண் அள்ளப்படுவதாகவும், இதை தடுக்க வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என மனுதாரர் சங்கம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வாதத்தை மறுத்த அரசுத்தரப்பு, உரிமங்களில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே மணல், சவுடு மண் அள்ள அனுமதிக்கப்படுவதாகவும், சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும், சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க மாவட்ட அளவில் சிறப்பு அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக, சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
உரிம விதிகளை மீறி மணல், சவுடு மண் அள்ளுவதை கண்டறிந்தாலோ, சட்டவிரோதமாக மணல் அள்ள அதிகாரிகள் அனுமதித்தாலோ, மனுதாரர் சங்கம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
What's Your Reaction?