Game Changer: ராம் சரணின் கேம் சேஞ்சர் செகண்ட் சிங்கிள் வெளியானது... ஷங்கர் இன்னும் மாறவே இல்ல!
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. கமல் – ஷங்கர் கூட்டணியில் 1996ம் ஆண்டு ரிலீஸான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக ‘இந்தியன் 2’ உருவானது. கதை, திரைக்கதை, மேக்கிங் என எல்லாவிதத்திலும் இந்தியன் 2 படம் தோல்வியை தழுவியது. ஆனால் இதற்கெல்லாம் சேர்த்து வைத்து இந்தியன் 3ம் பாகத்தில் ஷங்கர் ஸ்கோர் செய்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் கேம் சேஞ்சர் படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வாரிசான ராம் சரண், கேம் சேஞ்சர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் கேம் சேஞ்சர், பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. தெலுங்கில் ரங்கஸ்தலம், ஆர்.ஆர்.ஆர் உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ள ராம் சரண், கேம் சேஞ்சர் மூலம் இன்னொரு சூப்பர் ஹிட் கொடுக்க காத்திருக்கிறார். ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானியும், வில்லனாக எஸ்ஜே சூர்யாவும் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஜருகண்டி’ சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. பிரபுதேவா கோரியோகிராபி செய்திருந்த இந்தப் பாடலை, ஷங்கர் தனது வழக்கமான ஸ்டைலில் கலர்ஃபுல்லாக உருவாக்கியிருந்தார். இதன் தொடர்ச்சியாக கேம் சேஞ்சர் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தமன் இசையில் “ரா மச்சா மச்சா” என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடல், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது. ரா மச்சா மச்சா பாடலின் தமிழ் லிரிக்கலை விவேக் எழுதியுள்ளார், நகாஷ் அஜீஸ் பாடியுள்ளார்.
ஜருகண்டி பாடல் கலர்ஃபுல்லாக இருந்ததால், ரா மச்சா மச்சா வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தப் பாடலிலும் ஷங்கர் தனது பழைய ஸ்டைலிலேயே பெரிய படையுடன் களமிறங்கியுள்ளார். அதாவது நூற்றுக்கணக்கான குரூப் டான்ஸர்களை ராம் சரணின் பின்னால் ஆடவிட்டு ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், திருவிழா கடை போல உள்ளது ரா மச்சா மச்சா பாடலின் செட்டிங். அதேபோல் தமனின் இசையும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அவரது பழைய ஸ்டைலிலேயே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் கலெக்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஊழலுக்கு எதிராக போராடும் ராம் சரண், அரசியலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்துவது போல் கேம் சேஞ்சர் திரைக்கதையை எழுதியுள்ளாராம் ஷங்கர். எப்படிப் பார்த்தாலும் இதுவும் ஷங்கரின் முந்தைய படங்களைப் போல தான் இருக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?