கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்துள்ள எருமனூர் கிராமத்தில், தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கக்கூடிய எடில்பெர்த் பிலிப்ஸ் என்பவர், அப்பள்ளியில் நடப்பான்டு, கல்வி முடித்துவிட்டு சென்ற முன்னாள் மாணவிக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த முன்னாள் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரை தரும அடி கொடுத்து, அரை நிர்வாணத்துடன் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை அடித்தே இழுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அறிந்த விருத்தாச்சலம் காவல்துறையினர், விரைந்து வந்து, அரை நிர்வாணத்துடன் இருந்த தலைமை ஆசிரியரை, மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி, பள்ளி வளாகத்திற்குள், பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவருக்கு உறுதுணையாக இருந்த மற்ற ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், பயனளிக்காததால், ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் விருதாச்சலம் எருமனூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்பு வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவியிடம் விசாரணை செய்தபோது, தனக்கு விருப்பப்பட்டு தான் நடந்தது என கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்பின்பு சாலை மறியல் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விருத்தாச்சலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.