நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கு: சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது!
இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
By VASUKI 06 Jul 2025, 10:36 AM Last Update : 06 Jul 2025, 10:36 AM
வங்கி மோசடி வழக்கு தொடர்பாக நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, இந்தியாவில் இருந்து தப்பி இங்கிலாந்துக்கு சென்றார். சி.பி.ஐ. தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் லண்டனில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக வேண்ட்ஸ்வொர்த் சிறையில் 55 வயதான நீரவ் மோடி, அடைக்கப்பட்டுள்ளார்.
நீரவ் மோடியின் சகோதரர் நேஹால் தீபக் மோடியை கைது செய்ய சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டன. இந்நிலையில், அமெரிக்காவில் நேஹல் மோடி கைது செய்யப்பட்டுள்ளார். நேஹல் மோடியை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அமெரிக்கா கைது செய்துள்ளது. தற்போது அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
நேஹல் மோடி தற்போது பெல்ஜியம் நாட்டின் குடியுரிமையை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கிடையே தற்போது நாடு கடத்தல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.