தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலக் கீழடுக்குகளில் வலுவான வடகிழக்குக் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் இருந்து ஈரப்பதம் நிறைந்த காற்று தமிழகப் பகுதிகளுக்கு வருவதால், சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடிய சூழல் நிலவுகிறது.
4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
நவம்பர் 29ஆம் தேதியான இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நவம்பர் 30ஆம் தேதி வட கடலோரத் தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது
டிசம்பர் 2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
இந்தக் காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலும் இயல்பான அளவிலேயே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் மேகமூட்டத்துடன் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
LIVE 24 X 7









