தமிழ்நாடு

"கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால்.." சவுண்ட் விட்ட சரவணன்.. மடக்கிப்பிடித்த போலீஸ்!

முதலமைச்சர் விஜய்க்கு இணையத்தில் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.


Saravanan Arrest

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், நேரடியாகக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வேலூர் மாநகராட்சி 12-வது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் 100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புழல் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது சிறை வளாகத்தில் திரண்டிருந்த ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தச் சூழலில், அங்கிருந்த கவுன்சிலர் டீட்டா சரவணன், "கரூரிலேயே விஜய் கதையை முடித்திருக்க வேண்டும்; அன்னைக்கே அவனை போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?" என்று முதலமைச்சர் விஜயை அச்சுறுத்தும் வகையில் பேசிய காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

முதலமைச்சருக்குப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சென்னை புழல் காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவான டீட்டா சரவணனைப் பிடிக்கச் சென்னை புழல் காவல் நிலைய போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க நண்பர்களுடன் பெங்களூரு செல்வது போலக் கூறிவிட்டு, அவர் விழுப்புரத்திற்குச் சென்று பதுங்கியிருந்தார். தனிப்படை போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அவர் விழுப்புரத்தில் வைத்துச் கைது செய்யப்பட்டார்.

தற்போது கைது செய்யப்பட்ட டீட்டா சரவணனைச் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், புழல் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.