தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய 17 விசாரணை கைதிகளில், இதுவரை 13 பேரைப் காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
நள்ளிரவில் நீதிமன்றத்தில் ஆஜர்
பிடிபட்ட 13 பேரில் முதற்கட்டமாக பிரவீன், ராஜா சிக்கந்தர், சிலம்பரசன், ராஜ்குமார், லிங்க பிரசாத் ஆகிய 5 கைதிகள் நேற்று (அக்.27) நள்ளிரவில் ஆண்டிபட்டி நீதிமன்ற நீதிபதி எழில் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன், தப்பியோடிய சம்பவம் தொடர்பாகக் கண்டமனூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, சிறைக் காவலரைத் தாக்கிச் சங்கிலி பறித்தது உள்ளிட்ட 7 புதிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 10 வரை காவல்
நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, இந்த 5 கைதிகளையும் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி எழில் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீண்டும் தேக்கம்பட்டி சிறையிலேயே அடைக்கப்பட்டனர்.
தேடுதல் வேட்டை
பிடிபட்ட மேலும் 8 கைதிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அவர்கள் மீது புதிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதனிடையே, இன்னும் தலைமறைவாக இருக்கும் எஞ்சிய 4 கைதிகளைப் பிடிக்கத் தனிப்படை காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
LIVE 24 X 7









