தமிழ்நாடு

"முதல்வர் விஜய்யை சந்திக்க முடியவில்லை..." கூடங்குளம் போராளி சுப.உதயகுமாரின் பரபரப்பு கடிதம்!

15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் விஜய்யை சந்திக்க முயற்சித்து வருவதாக சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.


Suba Udayakumar's Appeal To CM Vijay
"நடிகர், நடிகைகளை சந்தித்துப் பேசும் முதலமைச்சர் விஜய், எங்களைப் போன்ற சூழலியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்புகிறார் கூடங்குளம் அணு மின் நிலையப் போராளி சுப.உதயகுமார்.

சூழலியலாளர், கல்வியாளர். சமூக செயற்பாட்டாளர் என்று அறியப்பட்ட சுப.உதயகுமார், நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்தை எதிர்த்து மக்கள் இயக்கம் தொடங்கி தீவிரமாகப் போராடியவர். அவர்தான் தற்போது, முதலமைச்சர் விஜய்யை சந்திக்க முடியவில்லை என்கிற வேதனையில் கடிதம்  எழுதி சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அவரது கடிதம் இப்படி தொடங்குகிறது, 'பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கடவுள்கள் அல்ல. மக்களின் வாக்குகளை வாங்கி சேவை செய்ய வந்த மக்களின் சேவகர்கள். எனவே, மக்களை எளிதில் அணுகக் கூடியவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். தற்போது, சினிமா பிரபலங்களாலும் அரசியல் தலைவர்களாலும் மட்டுமே முதலமைச்சரை அதிக சிரமமின்றி சந்திக்க முடிவதாக தெரிகிறது.


கூடங்குளம் அணு மின் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக எங்கள்மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதுகுறித்த கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் ஒப்படைப்பதற்காக அவரைச் சந்திக்க தொடர்ந்து முயற்சி செய்துவருகிறேன். முதலமைச்சர் தொடர்புடைய அனைத்து முகவரிகளுக்கும் பல மின்னஞ்சல்களை எழுதிவிட்டேன். அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளில் இருக்கும் எனக்கு தெரிந்த நண்பர்கள் சிவம் மூலம் ஐந்து நிமிட சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால், முறையான பதில் கிடைக்கவில்லை.

கூடங்குளம் போராட்டத்திற்குப் பிறகு ஓரளவு தமிழக மக்களால் அறியப்பட்ட மூத்த குடிமகன் நான். அப்படிப்பட்ட நானே, முதலமைச்சரை ஓரிரு நிமிடங்கள் சந்திப்பதற்காக இவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டியதிருக்கிறது. அப்படியானால் தமிழகத்தின் ஏதோ ஒரு தொலைதூர மூலையிலிருந்து வரும். படிப்பறிவில்லாத, அடையாளம் தெரியாத சாதாரண மக்களின் நிலையை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

யாராலும் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாத ஜெயலலிதாவைக்கூட எங்கள் குழுவினரால் இரண்டு முறை சந்திக்க முடிந்தது. கேரள முதல்வர் உம்மன் சாண்டி.. முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, வி.எஸ்.அச்சுதானந்தன், வி.நாராயணசாமி, அரவிந்த் கெஜ்ரிவால், இபிஎஸ், ஓபிஎஸ். ஸ்டாலின் ஆகியோரை எளிதாக சந்தித்திருக்கிறோம். அப்போது அணு ஆயுதப் பேரழிவு, எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள், காவல்துறை துன்புறுத்தல் ஆகிய எங்கள் தரப்பு கோரிக்கைகளை அவர்களிடம் எங்களால் சொல்ல முடிந்தது. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கைக்கூட சந்தித்துப் பேசியிருக்கிறோம்.

முதலமைச்சர் எங்களைச் சந்திப்பாரா? எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் குறித்து முடிவெடுப்பாரா? எங்கள் கடவுச்சீட்டுகளைத் திரும்பப் பெற முடியுமா? எனது வங்கிக் கணக்குகளைத் திரும்பப் பெற முடியுமா? இதற்காக நான் 15 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்' என்று முடிகிறது அந்த கடிதம்.

இதுகுறித்து உதயகுமாரிடம் கேட்டோம். "எல்லா கேள்விகளுக்கும் அந்த கடிதத்தில் விடை இருக்கிறது" என்று முடித்துக்கொண்டார்.

முதல்வர் விஜய் கவனத்திற்கு!

- எஸ். அண்ணாதுரை