இந்திய மகளிர் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக முக்கிய பொறுப்பை சுமந்து வந்த ஹர்மன்ப்ரீத் கவுர், தனது கிரிக்கெட் பயணத்தில் முக்கியமான ஒரு முடிவை அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக அணியை வழிநடத்திய அவர், இனி புதிய பாதையில் தனது கவனத்தை செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
கேப்டன் பொறுப்புக்கு விடை :
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அனைத்து வடிவங்களிலும் செயல்பட்டு வந்த ஹர்மன்ப்ரீத் கவுர், அந்தப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் இந்த முடிவை அவர் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக அணியின் வெற்றிகள், சவால்கள், விமர்சனங்கள் என பல்வேறு கட்டங்களை எதிர்கொண்ட நிலையில், இந்த முடிவு தனக்கு எளிதானதாக இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இது எளிதான முடிவு அல்ல” – ஹர்மன்ப்ரீத் கவுர் :
கேப்டனாக இருந்த காலத்தை நினைவுகூர்ந்த ஹர்மன்ப்ரீத், இந்தப் பொறுப்பு தனக்கு ஏராளமான நினைவுகளையும் உணர்வுகளையும் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
அணியின் நலனுக்காக சில நேரங்களில் தனது தனிப்பட்ட ஆட்டம், வளர்ச்சி மற்றும் எதிர்பார்ப்புகளைக் கூட பின்னுக்குத் தள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேப்டனாக பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்ததாகவும், அந்த முடிவுகள் அனைவராலும் உடனடியாக புரிந்துகொள்ளப்படவில்லை என்றாலும், அணியின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
2016 முதல் கேப்டனாக நீண்ட பயணம் :
ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி பயணம் நீண்ட காலம் தொடர்ந்தது. 2016-ம் ஆண்டு இந்திய T20 அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற அவர், சுமார் ஒரு தசாப்த காலம் அந்தப் பொறுப்பில் நீடித்தார்.
பின்னர் 2022-ல் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். 2023-ல் மூன்று வடிவங்களிலும் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றார்.
இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் நீண்ட காலம் அணியை வழிநடத்திய முக்கிய கேப்டன்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
உலகக் கோப்பை to ஆசிய விளையாட்டுப் போட்டி வரை :
ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி காலத்தில் இந்திய மகளிர் அணிக்கு குறிப்பிடத்தக்க பல தருணங்கள் அமைந்தன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய மகளிர் அணி தனது முதல் ODI உலகக் கோப்பையை வென்றது. அதேபோல், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் T20 பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தையும் இந்திய அணி கைப்பற்றியது.
அணியின் இந்த முக்கியமான வெற்றிகளில் ஹர்மன்ப்ரீத் கவுரின் தலைமைப் பொறுப்பும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
“என் கடமை முடிந்துவிட்டது” – ஹர்மன்ப்ரீத் :
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை அறிவித்த ஹர்மன்ப்ரீத், இந்திய அணியின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய இந்திய அணி திறமை, குணநலன் மற்றும் நம்பிக்கையுடன் நல்ல நிலையில் இருப்பதாகவும், அணியின் அடுத்த கட்டப் பயணத்தை ஆவலுடன் பார்க்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட கேப்டன் பொறுப்பை பெருமையுடன் ஏற்றுச் செயல்பட்டதாகவும், இந்திய மகளிர் கிரிக்கெட்டை வழிநடத்த கிடைத்த வாய்ப்புக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய கேப்டன் யார் ?
ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து , அடுத்த யார் கேப்டனாக பதவியேற்பது என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றது.
பல பெயர்கள் கேப்டன் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டு வரும் நிலையில் , நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி ஸ்மிர்தி மந்தனா கேப்டனாக பதவியேற்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் , அணியை வழிநடத்தும் சிறந்த தலைமையாக அவர் செயல்படுவார் என்றும் தேர்வுக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்கிறார் ஹர்மன்ப்ரீத் கவுர் :
கேப்டன் பதவியில் இருந்து விலகியிருப்பது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அல்ல என்பதையும் ஹர்மன்ப்ரீத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இனி கேப்டன் பொறுப்பின் அழுத்தம் இல்லாமல், கிரிக்கெட் மீதான தனது காதலுடன் மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“கேப்டன்சி முடிவுக்கு வருகிறது; ஆனால் பயணம் தொடர்கிறது” என்ற அவரது கருத்து, இந்திய அணியில் வீராங்கனையாக தனது பங்களிப்பை தொடரப்போகிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
நன்றி தெரிவித்த ஹர்மன்ப்ரீத் :
தனது கேப்டன்சி காலத்தில் உடன் இருந்த சக வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ஆதரவுப் பணியாளர்கள், நிர்வாகம், BCCI, குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் நன்றி தெரிவித்துள்ளார்.
வெற்றி, தோல்வி என இரு தருணங்களிலும் தனக்கு ஆதரவாக இருந்த அனைவரையும் நினைவுகூர்ந்த அவர், இந்திய கிரிக்கெட்டுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
கேப்டன் பொறுப்புக்கு விடை கொடுத்துள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், இனி ஒரு வீராங்கனையாக புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளார்.
LIVE 24 X 7









