சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி இயக்குநர்கள் மற்றும் குழுக் கூட்டங்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2-வது முறையாக தலைவரான ஜெய் ஷா
ஐசிசி தலைவராக ஜெய் ஷா கடந்த 2024-ம் ஆண்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தலைவராக இருந்த கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக போட்டியிட விரும்பாததால், ஜெய் ஷா அந்தப் பொறுப்புக்கு வந்தார். தற்போது ஐசிசி இயக்குநர்கள் முன்மொழிவின் அடிப்படையில், இரண்டாவது முறையாகவும் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மறுநியமனம் மூலம் சர்வதேச கிரிக்கெட்டின் வளர்ச்சி, ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரித்தல் மற்றும் வர்த்தக ரீதியான முன்னேற்றம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. ஜெய் ஷாவின் முக்கிய இலக்கு!
ஜெய் ஷாவின் புதிய பதவிக்காலத்தில் கிரிக்கெட் உலகம் பல முக்கியமான கட்டங்களை எதிர்கொள்ள உள்ளது. குறிப்பாக, 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவது மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் புதிய ரசிகர்களையும் இளம் வீரர்களையும் ஈர்க்க முடியும் என ஐசிசி நம்புகிறது. மேலும், 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையும் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய் ஷா நெகிழ்ச்சி!
இரண்டாவது முறையாக ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்த ஜெய் ஷா, இயக்குநர்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து செயல்படுவேன் என்றும், ரசிகர்கள், வீரர்கள், வர்த்தக கூட்டாளிகள் உள்ளிட்ட அனைவரின் நலன்களையும் கருத்தில் கொண்டு விளையாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
கிரிக்கெட் மக்களை ஒன்றிணைக்கும் மிகப்பெரிய சக்தி கொண்ட விளையாட்டு என்றும், தற்போதைய வளர்ச்சியை எதிர்கால தலைமுறைகளுக்கும் பயனளிக்கும் வகையில் மாற்றுவதே தமது இலக்கு என்றும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இளம் வயதில் பல சாதனைகள்!
38 வயதான ஜெய் ஷா, ஐசிசி வரலாற்றில் இளம் வயதில் தலைவரானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
2019-ம் ஆண்டு பிசிசிஐயின் கௌரவ செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு முக்கிய பங்காற்றினார்.
ஐபிஎல் தொடரின் சாதனை அளவிலான ஊடக உரிம ஒப்பந்தம், மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடக்கம், நவீன கிரிக்கெட் பயிற்சி மையம் அமைத்தல் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அவரது பதவிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டன.
மாவட்ட கிரிக்கெட்டில் தொடங்கி ஐசிசி தலைவர் வரை!
ஜெய் ஷாவின் கிரிக்கெட் நிர்வாக பயணம் 2009-ம் ஆண்டு மாவட்ட மற்றும் மாநில அளவிலான கிரிக்கெட் நிர்வாகத்தில் தொடங்கியது. பின்னர் குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்து படிப்படியாக உயர்ந்தார்.
தற்போது இரண்டாவது முறையாக ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் ஒலிம்பிக் கிரிக்கெட்டின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
LIVE 24 X 7









