விளையாட்டு

சேப்பாக்கத்தில் CSK - MI பலப்பரீட்சை: பதிலடி கொடுக்குமா மும்பை?

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சேப்பாக்கத்தில் CSK - MI பலப்பரீட்சை: பதிலடி கொடுக்குமா மும்பை?
CSK vs MI
19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன.

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளாகத் திகழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் இந்த சீசனில் பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்து வருகின்றன. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 7-வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி 8 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளுடன் 9-வது இடத்திலும் தள்ளாடி வருகின்றன. பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள இரு அணிகளுக்கும் இன்றைய வெற்றி மிகவும் அவசியமானதாகும்.

சிஎஸ்கே-வின் பேட்டிங் பலவீனம்

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் சிறப்பானதாக இல்லை. அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சஞ்சு சாம்சனை மட்டுமே ஒட்டுமொத்த பேட்டிங்கும் சார்ந்துள்ளது. காயம் காரணமாக ஆயுஷ் மாத்ரே விலகியது நடுவரிசைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், ஷிவம் துபே மற்றும் டெவால்ட் பிரேவிஸ் போன்ற அதிரடி வீரர்கள் இதுவரை எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த போட்டியில் 74 ரன்கள் எடுத்து ஃபார்முக்குத் திரும்பியிருப்பது அணிக்குச் சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

மும்பையின் பந்துவீச்சு சவால்

மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் அவ்வப்போது பிரகாசித்தாலும், பந்துவீச்சில் மோசமான நிலையில் உள்ளது. கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 243 ரன்கள் குவித்தும், பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியதால் அந்த அணி தோல்வியைத் தழுவியது. நட்சத்திர வீரர் ஜஸ்பிரீத் பும்ரா கூட விக்கெட் எடுக்க முடியாமல் அதிக ரன்களைக் கொடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நேருக்கு நேர்

ஏற்கனவே கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற மோதலில் சிஎஸ்கே அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. அந்தத் தோல்விக்கு இன்று பதிலடி கொடுக்க மும்பை தீவிரம் காட்டும். சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை, இதுவரை இவ்விரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. அதில் மும்பை 5 முறையும், சிஎஸ்கே 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது 10-வது முறையாக இந்த மைதானத்தில் மோதவுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.