அரசியல்

"தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்"- மு.க.ஸ்டாலின் சபதம்!

உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்" என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


M K Stalin
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் சூழலில், சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

ஜூன் 3-ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு வளாகத்தில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலை, கோடம்பாக்கம் முரசொலி வளாகம் மற்றும் அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் உள்ள அவரது சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், தேனாம்பேட்டை அன்பகத்தில் 75 அடி உயரக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்த அவர், அங்குள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிலைகளையும், புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், "மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!

என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே… வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.

நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.

உறுதியாய்ச் சொல்கிறோம்… மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.